பதிவு செய்த நாள்
03
டிச
2012
11:12
வாலாஜாபாத்: அருணாச்சலேஸ்வரர் கோவிலை சீரமைக்க, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வாலாஜாபாத்தில், செங்கல்பட்டு சாலையில், அபிதகுஜாம்பாள் சமேத அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவில், மிகவும் பழமை வாய்ந்தது. இந்து சமய அறநிலையத் துறை ஆய்வாளர் கட்டுப்பாட்டில் உள்ள, ஒரு கால பூஜை கோவில்களில் இதுவும் ஒன்று. மூலவர் அருணாச்சலேஸ்வரர் கிழக்கு நோக்கி அமர்ந்துள்ளார். நுழைவு வாயிலில், இடது புறத்தில் வீரபத்திரன், தட்சிணாமூர்த்தி, அய்யப்பன், மேற்கில், சிவலிங்கம், வலது புறத்தில் பிரம்மா, சண்டிகேஸ்வரர், சிவ துர்க்கை, பைரவர், சனிஸ்வரர் ஆகியோருக்கு தனி தனி சன்னிதிகள் அமைந்துள்ளன. கோவில் கட்டடம் மிகவும் பழமை வாய்ந்தது என்பதால், மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. சாலையை ஒட்டி அமைந்திருப்பதால், வாகனங்களிலிருந்து பறக்கும் தூசி, நேரடியாக கோபுரத்தில் படிந்து, சிற்பங்கள் பொலிவு இழந்து காணப்படுகின்றன. சிதலமடைந்த, கோவிலை சீரமைக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான நிலம் உள்ளது. இவை முறையாக கணக்கெடுக்கப் படவில்லை. இதனால், கோவிலின் நிலங்கள், ஆக்கிரமிப்பாளர் பிடியில் சிக்கி, பறிபோகும் அபாயம் ஏற்பட்டள்ளது என, பக்தர் ஒருவர் தெரிவித்தார். இது குறித்து, இந்து சமய அற நிலையத் துறை, ஆய்வாளர் ஒருவர் கூறுகையில், ""இந்த கோவிலுக்கு சொந்தமாக, சொத்துகள் இருப்பதாக தெரியவில்லை. ஒரு காலை பூஜை தவறாமல் நடைபெறுகிறது. கோவிலை, நேரில் ஆய்வு செய்து சீரமைக்க, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிவித்தார்.