பதிவு செய்த நாள்
03
டிச
2012
11:12
திருச்சி: மாநகராட்சி சார்பில் கட்டப்பட்டு, உபயோகத்தில் இருந்த கழிவறையை, தனிநபர் ஒருவர் தனது தன்னலத்துக்காக பூட்ட வைத்திருப்பதால், உறையூர் வெக்காளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கழிவறை இல்லாமல் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். தமிழரின் பெருமை உலகறிய செய்த சோழ மன்னர்களின் தலைநகராக இருந்த பெருமைக்குரியது, திருச்சி உறையூர் நகரம். சோழர் ஆட்சிக்காலத்தில் இருந்து, இன்றுவரை உறையூரில் வெக்காளியம்மன் அருளாட்சி புரிந்து வருகிறார். தமிழகம் மட்டுமல்லாது, உலகம் முழுவதும் வெக்காளியம்மனுக்கு பக்தர்கள் இருக்கின்றனர். தினந்தோறும் நூற்றுக்கணக்கான பக்தர்களும், விழாக்காலங்களில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இத்தகைய சிறப்புமிக்க வெக்காளியம்மன் கோவிலில், பக்தர்களின் வசதிக்காக ஒரு கழிவறை கூட இல்லை என்பது வருத்தத்துக்குரிய விஷயம். இதனால் கோவிலுக்கு வரும் முதியவர்கள், வயோதிகர்கள், பெண்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர். கோவிலை மேம்படுத்தும் விஷயத்தில் மட்டும் அக்கறை காட்டும் இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மாநகராட்சி, கோவில் அருகே கழிவறை அமைக்க உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வெக்காளியம்மன் பக்தர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
இதுகுறித்து, 60 வார்டு அ.தி.மு.க., கவுன்சிலர் சிவசங்கர ராஜவேலு கூறியதாவது: வெக்காளியம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, வெக்காளியம்மன் கோவில் எதிரே, கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன் திருச்சி மாநகராட்சி சார்பில் இலவச கழிவறை கட்டித்தரப்பட்டது. சில ஆண்டுக்காலம் சிறப்பாக இயங்கி வந்தது. இந்நிலையில், கழிவறையின் பின்புறம், ஏ.எம்.எஸ்., என்ற திருமண மண்டபம் கட்டப்படடது. "கக்கூஸ் இருந்தால், கல்யாண மண்டபத்துக்கு யாரும் வரமாட்டார்கள் என்ற "தன்னல நோக்கில், மண்டப உரிமையாளர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து கழிவறையை பூட்டி விட்டார். இதனால், வெக்காளியம்மன் கோவிலுக்கு வரும் பெண்கள், முதியவர்கள், சிறுவர், சிறுமியர் சிறுநீர் கழிக்கவேண்டும் என்றால், கோவிலிருந்து சுமார், 1,000 மீட்டர் தொலைவில் உள்ள முஸ்லீம் தெருவுக்குதான் செல்லவேண்டும். இவ்விஷயத்தில் மாநகராட்சி அக்கறை செலுத்தாத நிலையில், அப்பகுதி பொதுமக்கள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. மாநகராட்சியும் இவ்விஷயத்தில் உரிய கவனம் செலுத்தி, கழிவறையை உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.