பதிவு செய்த நாள்
05
பிப்
2025
10:02
பல்லடம்; குறிக்கோளுடன் வாழ்வதே வாழ்க்கை என, பல்லடம் அருகே நடந்த பெரிய புராண தொடர் வகுப்பில் அறிவுறுத்தப்பட்டது. பல்லடத்தை அடுத்த, பரமசிவம்பாளையம் பரமசிவன் கோவிலில், பெரியபுராணம் தொடர் வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது. பவானி சிவனடியார் திருக்கூட்டத் தலைவர் தியாகராஜன் விழாவை துவக்கி வைத்தார். பவானி திருக்கூட்ட அறக்கட்டளை சிவனடியார் பிரகாசம் பேசியதாவது: அந்தணர்கள், அரசர்கள், வணிகர்கள், வேளாளர்கள், சலவை செய்பவர்கள், செருப்பு தைப்பவர்கள் என, வெவ்வேறு குலங்களில் பிறந்து, வெவ்வேறு இறைத் தொண்டுகள் செய்து, அந்த தொண்டின் காரணமாக, என்றும் இறைத்தன்மை பெற்றவர்கள் தான் நாயன்மார்கள். இன்றும் அவர்கள் வணக்கத்திற்கு உரியவர்களாக இருப்பதற்கு காரணம், அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை, கொண்ட குறிக்கோளுமே ஆகும். இதை செய்வேன்; இதை செய்ய மாட்டேன் என, நமக்கு நாமே நெறிப்படுத்திக் கொண்டு, குறிக்கோளுடன் வாழ்வதுதான் வாழ்க்கை. இவ்வாறு, வாழ்க்கையை நெறிப்படுத்திக் கொண்டு உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் தான் நாயன்மார்கள். மனித வாழ்க்கையில், ஒரு உயர்ந்த இலக்கு வைத்துக் கொண்டு, அந்த இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும்.
வாழ்க்கையை நெறிப்படுத்தி வாழ்வதற்கு, நமக்கு முன் இருந்த அனுபவமுடைய நம் முன்னோர்களான அருளாளர்களின் வரலாற்றை படித்தோமானால், வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் தடுமாற்றங்கள் நீங்கி, கொண்ட கொள்கையில் உறுதியாக நிற்பதற்கு உண்டான வாய்ப்பும் கிடைக்கும். இல்லற வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்று வாழ்வியல் நெறிமுறைகளை சொல்வதிலும் இந்த நூல் ஒப்பற்றது. வழிபாட்டு நெறிகள், ஞான நெறி, கடந்த கால வரலாறுகளை சொல்லும் வரலாற்று நூலாகவும் இது உள்ளது. என்ன நோக்கத்துடன் திருத்தொண்டர் புராணம் நூலை அணுகுகிறீர்களோ, அதற்கு ஏற்ப சுரங்கம் போல், தகவல்களை வாரி வாரி கொடுக்கக் கூடியது. தொண்டர்களுடைய வரலாற்றை சொல்லக்கூடிய ஒரு நூல் உண்டு என்றால் அது, திருத்தொண்டர் புராணம் மட்டுமே. திருவள்ளுவர், சேக்கிழாருக்கு மட்டுமே தெய்வப்புலவர் என்ற சிறப்பு உண்டு. ஞானிகள் உணர்ந்தார்கள் இறைவனை பாடினார்கள். அவர்களைப் பின்பற்றி வந்த பலரும் அதை உணர்ந்தார்கள். இவ்வாறு, நிச்சயம் உங்களுக்கும் அந்த சிவம் உணர்த்தும். இவ்வாறு அவர் பேசினார்.