திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2025 01:02
திருநெல்வேலி; திருநெல்வேலி என பெயர் வரக் காரணமான நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் நிகழ்வு இன்று நெல்லையப்பர் கோயிலில் நடந்தது.
நெல்லையப்பர், காந்திமதியம்மன் கோயிலில் நடக்கும் முக்கிய விழாக்களில் ஒன்றான தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது. கோயிலில் தல புராணம் உருவாக காரணமான, நெல்லுக்கு வேலியிட்ட திருவிளையாடல் இன்று காலை நடந்தது. முன்னொரு காலத்தில் வேதபட்டர் என்பவர் பொதுமக்களிடம் சேகரித்த, நெல் மணிகளை சுவாமிக்கு அமுது படைப்பதற்காக, காயப்போட்டிருந்தார். தாமிரபரணிக்கு குளிக்கச்சென்றுவிட்டு திரும்பும்போது மழை பெய்தது. அந்த பகுதி முழுவதும் மழை பெய்திருந்தது. ஆனால் காயப்போட்டிருந்த நெல் மீது மழை நீர் விழாமல் சுவாமியே வேலியிட்டு காத்திருந்தது போல இருந்தது. இதனை வேதபட்டர், மன்னரை அழைத்து காண்பித்தார். அப்போது முதல் இந்த தலம், திருநெல்வேலியானது. இதனை முன்னிட்டு இன்று நெல்லையப்பர் சன்னதியில் நந்தி முன்பாக நடந்த நிகழ்வில் நெல்குவித்து வைத்து வழிபாடு செய்யப்பட்டது. தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.