பதிவு செய்த நாள்
05
பிப்
2025
01:02
பிரயாகராஜ்; உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, இன்று (பிப்., 05) திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார். உள்நாட்டில் இருந்து மட்டுமின்றி, வெளிநாடுகளில் இருந்தும் ஆயிரக்கணக்கானோர் மஹா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடி வருகின்றனர். இந்நிலையில், இன்று (பிப்., 05) மஹா கும்பமேளா நடக்கும் பிரயாக்ராஜுக்கு பிரதமர் மோடி வந்தார். திரிவேணி சங்கமத்தில், அவர் புனித நீராடினார். முன்னதாக மோட்டார் படகில் கும்பமேளா நடக்கும் இடத்தில், உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் பார்வையிட்டார். தொடர்ந்து திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வழிபட்டார்.
இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது.. மகா கும்பமேளாவில் பங்கேற்றது எனது பாக்கியம். அங்கு நீராடியதை தெய்வீக இணைப்பின் ஒரு தருணமாக உணர்ந்தேன்; கோடிக்கணக்கான மக்களைப் போல் நானும் பக்தி உணர்வால் நிறைந்தேன். இன்று, பிரயாகராஜ் மகா கும்பத்தில் புனித சங்கமத்தில் நீராடிய பிறகு பூஜை-அர்ச்சனை செய்யும் பெரும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. கங்கை அன்னையின் ஆசிகளால் எனக்கு அளவற்ற அமைதியும் திருப்தியும் கிடைத்தது. அனைத்து நாட்டு மக்களின் மகிழ்ச்சி, செழிப்பு, ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்காக நான் அவளிடம் பிரார்த்தனை செய்தேன். கங்கை மாதா அனைவருக்கும் அமைதி, ஞானம், நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கத்தை அருளட்டும் என பிரதமர் மோடி நெகிழ்ச்சியுடன் குறிபிட்டுள்ளார்.