பதிவு செய்த நாள்
04
டிச
2012
10:12
நாகர்கோவில்: கோட்டாறு சவேரியார் ஆலய 10ம் நாள் விழாவில் தேர் பவனி நடந்தது. ஏராளமான மக்கள் கலந்துகொண்டனர்.குமரி மாவட்டத்தில் மிகவும் முக்கியமான ஆலயங்களில் கோட்டாறு புனித சவேரியார் ஆலயமும் ஒன்றாகும். இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் 10 நாட்கள் திருவிழா நடக்கிறது. இந்த ஆண்டு திருவிழா கடந்த மாதம் 24ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நேற்றுடன் முடிவடைந்தது.விழா நாட்களில் திருப்பலி, ஆடம்பர கூட்டு திருப்பலி, முதல் திருவிருந்து, நற்கருணை ஆசீர், சிறப்பு மாலை ஆராதனை, கலை நிகழ்ச்சிகள் நடந்தன. 10ம் திருவிழாவான நேற்று நேற்று காலை மறைமாவட்ட பஷப் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் தூய சவேரியார் பெருவிழா திருப்பலி நடந்தது. புனிதர் பட்ட திருப்பேராய தலைவர் கர்தினால் ஆஞ்சலோ அமாத்தோ, திருத்தந்தையின் இந்திய தூதர் சல்வத்தோரே பெனாட்சியோ உள்பட பலர் பங்கேற்றனர். தொடர்ந்து மலையாள திருப்பலி நடந்தது. இதனையடுத்து கோட்டாறு புனித சவேரியார் ஆலய விரிவாக்கத்திற்கான அடிக்கல் அர்ச்சிக்கபடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து தேர்ப்பவனி துவங்கியது.
காவல்சமனஸ், செபாஸ்தியார், தூயசவேரியார், மாதா தேர் ஆகிய தேர் பவனி ஒன்றன் பின் ஒன்றாக வந்தன.ஆலய வளாகத்தில் புறப்பட்ட தேர்ப்பவனி தெற்கு தெரு, கம்போளம், ரயில்வே ரோடு, மெயின் ரோடு, வடக்கு தெரு வழியாக சென்று மாலையில் மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது. தேர்பவனி சென்ற இடங்களில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் காணிக்கை செலுத்தி வழிபட்டனர்.உலக அளவில் பரசித்தி பெற்ற கோட்டார் சவேரியார் ஆலய விழாவில் தமிழகம், கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து விழாவில் கலந்துகொண்டனர். சவேரியார் ஆலய விழாவையொட்டி நேற்று குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டிருந்தது. ஏற்பாடுகளை வட்டாரகுரு குல முதல்வர் ஜான்தமஸ்க், பங்குதந்தை ஜான் ராபர்ட் ஜூலியஸ், இணை பங்கு தந்தை ரொனால்டுரெக்ஸ், மற்றும் பங்குப்பேரவை உறுப்பனர்கள், பங்கு மக்கள் இணைந்து செய்திருந்தனர்.