பதிவு செய்த நாள்
05
டிச
2012
10:12
தமிழக கோவில் யானைகள், ஊட்டச்சத்து மற்றும் உணவு பற்றாக்குறையால், ஆரோக்கியம் குன்றி, குறைந்த ஆயுட்காலத்தை கொண்டிருக்கின்றன.கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் தேவஸ்தானத்தில் உள்ள, யானைத்தாவளத்தில் 85 யானைகள் முகாம்கள், பராமரிக்கப்படுகின்றன. அங்குள்ள கோவில் யானைகள், வழக்கமாகவே, ஊட்டச்சத்து உணவு பழக்கம் கொண்டவை; அவற்றுக்கு, ஆயுர்வேத மருந்துகளும் வழங்கப்படுகின்றன. யானை பராமரிப்புக்கு, அரம், தேவஸ்தான போர்டும், கோவில் நிர்வாகங்களும், போதிய நிதிஒதுக்கி வருகின்றன.யானைகள், பக்தர்களிடம் தும்பிக்கை ஏந்தி, பிச்சைஎடுப்பதில்லை. ஆனால், தமிழக கோவில்களில் உள்ள யானைகளுக்கு, உணவுக்காக, தனி நிதி ஒதுக்கப்படாததால், பிச்சை எடுக்கின்றன! தமிழகத்தில், கோவில் பிரசாதம், பாயாசம் உள்ளிட்ட உணவுகளை, பக்தர்கள், யானைகளுக்கு வழங்குகின்றனர். அதிகமான இனிப்பு உணவுகளை சாப்பிடும் நிலைக்கு, யானைகள் தள்ளப்படுவதால், உடல் ஆரோக்கியம் குன்றிவிடுகிறது. இதனால், தமிழகத்தில், கடந்த சில ஆண்டுகளில், 25க்கும் மேற்பட்ட கோவில் யானைகள் இறந்துள்ளன.
யானை வளர்ப்பில் அனுபவம் பெற்ற, கால் நடை மருத்துவர் ஒருவர் கூறியதாவது: ஒரு யானை, ஆரோக்கியமாக இருக்க, தினமும், 150 முதல், 200 கிலோ, பச்சைப் புல் தேவை. இது தவிர, 2 கிலோ கொள்ளு, 5 கிலோ அரிசி சாதம், 5 தேங்காய், 150 கிராம் உப்பு, 100 கிராம் தாது உப்பு, 150 கிராம் வெல்லம் உணவாக சாப்பிட வேண்டும். 150 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். வாழைப்பழம், மூங்கில் குருத்து, கரும்பு, காட்டுப்புல் போன்றவற்றையும் யானைகள் விரும்பி சாப்பிடும். இதற்கு, நாள் ஒன்றுக்கு, 800 முதல், 1,000 ரூபாய் வரை செலவாகும். தினமும், 1,000 ரூபாய் செலவிடுவது கடினம். உணவு செரிமான கோளாறு காரணமாக தான், யானைகள் அதிகம்இறக்கின்றன. இதனால், யானைகளுக்கு, மாதத்தில் ஒரு முறை, குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். கோவில் யானைகள், ஒரே இடத்தில் கட்டி வைக்கப்படுவதால், உடலில் சோர்வு ஏற்படுவதுடன், உடற்பயிற்சியும் கிடைப்பதில்லை. புல் தின்னும் இயற்கை முறையை கூட, யானைகள் மறந்துவிடும் நிலை உள்ளது. இதனால், புல்வெளி, பசுமை செடிகள் மற்றும் சாதாரண மண்ணில் நடக்க விட வேண்டும். கேரள கோவில்களில் ஆண் யானைக ள் தான் அதிகம்; கோவில் விழாக்களிலும், நீண்ட தந்தம் கொண்ட, கம்பீரமான ஆண்யானைகளை தான் பயன்படுத்தப்படுகின்றன. ஆண் யானைகள், 10 வயதிலும், பெண் யானைகள், 13 வயதுக்குள்ளும் பருவ வயதை அடைந்து விடுகின்றன. தமிழக கோவில்களில் வளர்க்கப்படும் பெரும் பாலான யானைகள், பெண் இனத்தைச் சார்ந்தவை; ஊட்டச்சத்து குறைவு காரணமாக, பருவம் அடைவதில்லை; எலும்பும் தோலுமாகவே இருக்கின்றன. கோவில்களில் உள்ள யானைகள், குட்டி ஈன்றதாக வரலாறு இல்லை. இனசேர்க்கை உள்ளிட்ட, இயற்கை தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருப்பதாலும், உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாததாலும், நோய் தாக்குத லுக்கு ஆளாகின்றன. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.