பதிவு செய்த நாள்
05
டிச
2012
11:12
நகரி: திருப்பதி திருமலை வெங்கடேச பெருமாள் கோவிலில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும், முந்திரி பருப்பு பற்றாக்குறையால், லட்டு கவுன்டரில், நான்கு லட்டுக்கு பதிலாக, இரண்டு லட்டுகள் மட்டுமே வினியோகம் செய்யப்பட்டன. இதனால், கவுன்டர் அருகே பக்தர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. வெங்கடேச பெருமாளை தரிசிக்க, தினமும், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், திருமலை கோவிலுக்கு வருகின்றனர். இவர்களுக்கு வினியோகிக்க, தினமும், 2.5 லட்சம் முதல் மூன்று லட்சம் லட்டுகள் வரை தயார் செய்யப்படுகின்றன.லட்டு தயார் செய்ய தேவைப்படும் நெய், கடலை மாவு, சர்க்கரை, முந்திரி பருப்பு, ஏலக்காய், உலர்ந்த திராட்சை போன்ற மூலப் பொருட்களை, திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், டன் கணக்கில் டெண்டர் மூலம் கொள்முதல் செய்து வருகிறது.நேற்றுமுன்தினம், லட்டு தயாரிக்க பயன்படும் முந்திரியின் இருப்பு முழுமையாக தீர்ந்து விட்டது. அதனால், கவுன்டர்களில் லட்டு வினியோகத்தில் பற்றாக்குறை ஏற்படும், என்பதை உணர்ந்த தேவஸ்தான அதிகாரிகள், பக்தர் ஒருவருக்கு, இரண்டு லட்டுகள் வீதம் விற்பனை செய்தனர். இதனால், கவுன்டர் அருகே பக்தர்கள் குவிந்தனர்.இத்தகவலை கேள்விப்பட்ட தேவஸ்தான நிர்வாக அதிகாரி சுப்பிரமணியம், கோவில் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி, அன்று மாலை முதல் மீண்டும் நான்கு லட்டுக்கான டோக்கன் வழங்க ஏற்பாடு செய்தார். இதனால், லட்டு வினியோக கவுன்டர் அருகே படிப்படியாக கூட்டம் குறைய ஆரம்பித்தது.