சிவகங்கை, காளையார்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சொர்ணகாளீஸ்வரர், சொர்ண வள்ளி அம்பாள் தேரோட்டம் இன்று நடந்தது. சிவகங்கை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட இக்கோயிலில் பிப்.,2 ம் தேதி கொடியேற்றத்துடன் தைப்பூச விழா தொடங்கியது. தினமும் மாலை சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. விழாவின் 9 ம் நாளான நேற்று காலை அலங்கரிக்கப்பட்ட பெரிய தேரில் பிரியாவிடையுடன் சொர்ணகாளீஸ்வரர், சிறிய தேரில் சொர்ணவள்ளி அம்பாள் எழுந்தருளினர். தேரில் எழுந்தருளிய சுவாமிக்கு குருக்கள் சிறப்பு அபிஷேகம் செய்தனர்.
இன்று காலை 9:20 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. அனைத்து பக்தர்களும் தேர் வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு ரத வீதிகளை சுற்றி காலை 10:50 மணிக்கு நிலையை அடைந்தது. சொர்ணவள்ளி அம்பாள் தேரினை பெண்கள் ஒன்று கூடி இழுத்தனர். தேரோட்டத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். சிதறு தேங்காய் உடைத்து வழிபட்டனர். காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேவஸ்தான கண்காணிப்பாளர் பாலசரவணன் தலைமையில் ஏற்பாட்டை செய்திருந்தனர். இன்று காலை முதல் தைப்பூச விழா சிறப்பு அபிேஷகம் நடைபெறும். இரவு 11:00 மணிக்கு கொடி இறக்கியதும், தைப்பூச விழா நிறைவு பெறும்.