பதிவு செய்த நாள்
10
பிப்
2025
05:02
திருச்செந்தூர்; தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு காவடி எடுத்தும், பாதயாத்திரை ஆகவும் வரும் பக்தர்கள் குவிந்த வருகின்றனர்.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை(11ம் தேதி)தைப்பூசத் திருவிழா நடக்கிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் திருவிழா மற்றும் சில முக்கிய தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு நேற்று அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு, 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை, காலை 6:00 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடந்தது. தொடர்ந்து மற்ற கால பூஜைகள் வழக்கம் போல் நடந்தது. விடுமுறை தினமான நேற்று திரளான பக்தர்கள் அதிகாலை முதலே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் பொது தரிசன வரிசை, ரூ. 100 கட்டண தரிசன வரிசை செல்லக்கூடிய வரிசை என அனைத்து வழிகளும் பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
சண்முகர் 370வது ஆண்டு விழா; சுவாமி சண்முகர் கடலில் கண்டெடுத்த நாளான இன்று(10ம்தேதி) அதிகாலை 4:00 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, 4:30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனை நடக்கிறது. காலை 6:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாரதனை நடக்கிறது. பின்னர் சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடக்கிறது. மாலையில் சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதி உலா நடக்கிறது.
தைப்பூசத் திருவிழா ; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா நாளை (11ம்தேதி) நடக்கிறது. அன்று அதிகாலை 1:00 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1:30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், அதிகாலை 4:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பின்னர் காலை 6:00 மணிக்கு மேல் 6.30-க்குள் சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடக்கிறது. காலை 10:00 மணிக்கு உச்சிகால அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி அலைவாயுகந்த பெருமான் சப்பரத்தில் எழுந்தருளி வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு வந்து சேருகிறார். அங்கு சுவாமிக்கு அபிஷேக, அலங்காரமாகி, சுவாமி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து கோயிலை சேருகிறார். தைப்பூச திருவிழாவை முன்னிட்டு பாதயாத்திரை பக்தர்கள் நீண்ட நேரம் தரிசன வரிசையில் நிற்காமல், எளிமையாக சுவாமி தரிசனம் செய்யும் வகையில் தனி பாதை அமைக்கப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி சாலை மார்க்கமாக நடந்து வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு கோயில் நிர்வாகம் சார்பில் நகரின் எல்கையில் பகுதியில் வைத்து கையில் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. இவ்வாறு ஒட்டப்பட்டுள்ள பாதையாத்திரை பக்தர்கள் திருச்செந்தூர் கோயிலுக்கு வந்தவுடன் தனி வழியில் சென்று சுவாமி தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த வழியில் பாதயாத்திரை பக்தர்கள் மட்டும் சென்று சுவாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது