பழநி, கிழக்கு ரத வீதியில் உள்ள பெரியநாயகி அம்மன் கோயிலில், தைப்பூச திருவிழா கொடி ஏற்றப்பட்டு தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் தீபாராதனை நடைபெறுகிறது. வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி, தந்த பல்லாக்கில் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. புதுச்சேரி சப்பரம், ஆட்டுகிடா, வெள்ளி காமதேனு வாகனத்தில் தங்க குதிரை, தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு ரதவீதியில் நடைபெற்று வருகிறது. இன்று தைப்பூச தேரோட்டம் நடைபெற உள்ள நிலையில் பழநிக்கு தைப்பூச பாதயாத்திரையாக வெளி மாவட்ட பக்தர்கள் அதிகளவில் திரளாக வந்த வண்ணம் உள்ளனர். பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் சாலையின் இடது ஓரத்திலும் வரவேண்டும். பழநி வரும் பக்தர்கள் அவர்களுக்கு என ஒதுக்கப்பட்ட பாதயாத்திரை பாதையில் நடந்து வர வேண்டும். பக்தர்கள் சிலர் சாலையின் பாதி வரை நடந்து வருகின்றனர். பழநி வரும் பாதையில் பயணிக்கும் பேருந்துகள், கனரக வாகனங்கள் அதிக வேகத்தில் வருவதை தவிர்க்க வேண்டும். வாகனங்களை போலீசார் மாற்றுப்பாதையில் அனுப்பி வைத்தனர்.
சாரை சாரையாக வரும் பக்தர்களுக்கு வழிநெடுகிலும் அன்னதானங்கள் பழங்கள் குளிர்பானங்கள் இளநீர் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு உடல் கோளாறுகள் ஏற்படும் கால் வலி கை வலி வயிற்று வலி ஆகியவைகளுக்கு மாத்திரைகள் மற்றும் வலி நிவாரண ஆயின்மென்ட் வழங்கப்பட்டு வருகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் தற்காலிக கழிப்பறைகள், குளியல் அறைகள் மற்றும் பக்தர்கள் தங்க நிரந்தர மற்றும் தற்காலிக இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பழநி இடும்பன் குளம், சண்முக நதி பகுதிகளின் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளது. சண்முக நதி அருகே கோவை சாலையில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. பழநியில் நேற்று காலை முதல் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் இருந்தது. இதனால் பக்தர்கள் சிரமம் அடைந்தனர். பக்தர்களின் பாதுகாப்பு கருதி 2000க்கும் மேற்பட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட வருகின்றனர்.