திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூச விழா; அலை கடலாய் திரண்ட பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2025 10:02
திருச்செந்தூர் :திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் இன்று தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடக்கிறது. விழாவில் கலந்துகொள்ள தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூரில் குவிந்துள்ளனர்.
தமிழ்கடவுளாம் முருகப்பெருமானின் ஆறுபடைவீடுகளில் இரண்டாவது படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் தைப்பூசத் திருவிழாவும் ஒன்று. அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. முருகன் குடிகொண்டுள்ள அனைத்து திருத்தலங்களிலும் இன்று தைப்பூசத் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று தைப்பூசத் திருநாளை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து மணிக்கு விஸ்வரூப தரிசன தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. அதனைதொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது. உச்சிகால தீபாராதனை முடிந்தபிறகு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், அலங்கார தீபாராதனையும் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து சுவாமி தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். திருச்செந்தூருக்கு தற்போது எல்லா நாட்களிலும் பாதயாத்திரையாக பக்தர்கள் வந்தாலும் தைப்பூசத் திருநாளுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் எண்ணிக்கை பல ஆயிரங்களை தாண்டும். இது கடந்த சில வருடங்களாக பல மடங்கு அதிகரித்துவருகிறது. திருச்செந்தூர் நோக்கிவரும் அனைத்து ரோடுகளிலும் பச்சை ஆடை உடுத்திய முருகனின் பக்தர்களாகவே காட்சியளிக்கின்றனர். அந்தளவுக்கு திருச்செந்தூர் தைப்பூச திருவிழாவில் கலந்துகொள்ள தமிழகம் முழுவதும் இருந்து பக்தர்கள் விரதமிருந்து பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர்.