மயிலாடுதுறை வைத்தீஸ்வரன் கோவிலில் காவடி, பால்குடத்துடன் குவிந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11பிப் 2025 01:02
மயிலாடுதுறை;வைத்தீஸ்வரன் கோவிலில் பக்தர்கள் காவடி, பால்குடம் எடுத்து வந்து பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் செய்து பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன்கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான தேவார பாடல் பெற்ற தையல்நாயகி சமேத வைத்தியநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. செல்வ முத்துக்குமாரசுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி அருள் பாதிப்பதால் முருகனின் அறுபடை வீடுகளுக்கு இணையாக போற்றப்படும் இந்த கோவிலில் கிழக்கு கோபுரம் அருகே பழனி ஆண்டவர் சுவாமி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் தைப்பூசம் அன்று பழனி ஆண்டவருக்கு பக்தர்கள் காவடி எடுத்து வந்து வழிபாடு செய்வது வழக்கம். இவ்வாண்டு தைப்பூசத் திருநாளான இன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்தி கடனாக மேலரத வீதியில் உள்ள ஆட்கொண்ட விநாயகர் கோவிலில் இருந்து மங்கள வாத்தியங்கள் இசைக்க, வானவேடிக்கைகள் முழங்க, நடன நிகழ்ச்சியுடன் பால் காவடி மற்றும் பால் குடங்கள் எடுத்து தேரோடும் நான்கு வீதிகளையும் வலம் வந்து பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். தைப்பூச விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீ வைத்தீஸ்வரா அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர். காவடி மற்றும் பால்குடம் ஊர்வலத்தை முன்னிட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.