பதிவு செய்த நாள்
12
பிப்
2025
05:02
வேடசந்தூர்; வேடசந்தூர் தேவிநாயக்கன்பட்டியில், ஊர் மக்கள் ஒன்று கூடி, சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து, வினோதமாக கொண்டாடிய நிலா பெண்ணே நிகழ்ச்சி, இப்பகுதியில் விடிய விடிய நடந்தது.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா தேவி நாயக்கன்பட்டியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு விவசாயமும் கால்நடை வளர்ப்பும் முக்கிய தொழிலாக உள்ளது. விவசாயம் செழிக்கவும், மக்கள் நலமுடன் வாழவும் ஒவ்வொரு ஆண்டும், தைப்பூச தினத்தன்று, ஓர் சிறுமியை நிலா பெண்ணாக பாவித்து, ஊர் மக்கள் ஒன்று கூடி வினோத வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. தைப்பூசத்திற்கு ஒரு வாரத்திற்கு முன்பே, ஊர் மக்கள் ஒன்று கூடி, நிலா பெண்ணை ஒருமனதாக தேர்வு செய்கின்றனர்.
தேர்வு செய்யப்படும், வயதுக்கு வராத அந்த சிறுமியை, நிலாவுக்கு மனைவியாக பாவித்து கொண்டாடுகின்றனர். தேர்வு செய்யப்பட்ட அந்த நிலா பெண்ணிற்கு, ஒரு வார காலத்திற்கு, அப்பகுதியில் உள்ள சிறுமிகள் மற்றும் பெண்கள் ஒன்று கூடி, அங்குள்ள கோயிலில் வைத்து பால், பழம், பேரிச்சை உள்ளிட்ட சத்தான உணவுகளை வழங்கி, மகிழ்கின்றனர். நடப்பு ஆண்டில், குட்டம் ஊராட்சி தலை தலையூத்துப்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன் தமிழ்செல்வி தம்பதியினரின் மகள் தீக் ஷா 13, தேர்வு செய்யப்பட்டார். இவர் ஒட்டன்சத்திரம் காளாஞ்சிபட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று தைப்பூசத்தை முன்னிட்டு இரவு 9;00 மணி அளவில் ஊரில் உள்ள மா சடச்சியம்மன் கோயிலில் இருந்து, தாரை தப்பட்டை முழங்க, ஆண்கள் பெண்கள் என ஊர் மக்கள் புடை சூழ, நிலா பெண்ணை ஊர் அருகே உள்ள சரளைமேடு பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு கூடியிருந்த பெண்கள் அந்த நிலா பெண்ணிற்கு ஆவாரம் பூவை தலை மற்றும் கை கால்களில் சூடி, மீண்டும் ஊரில் உள்ள மாரியம்மன் கோவில் முன்பு அழைத்து வந்தனர். மாரியம்மன் கோவில் முன்பு நிலா பெண்ணை அமர வைத்து ஆண்கள் பெண்கள் என கூடி நின்று, வட்டமிட்டு பாட்டு பாடி கும்மி அடித்து மகிழ்ந்தனர். அதன் பிறகு பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து நிலா பெண்ணுக்கு சீர் செய்தனர் அதன் பிறகு ஊர் எல்லையில் உள்ள நீர் நிறைந்த கிணற்றுக்கு அழைத்துச் சென்று கூடையில் வைத்திருந்த ஆவாரம்பூக்களை கிணற்றில் உள்ள தண்ணீரில் போட்டு அனைவரும் வணங்கினர். அதேபோல் மண் கலையத்தில் விளக்கு ஏற்றி மிதக்க விட்டு, வழிபாடு நடத்தினர். அதன் பிறகு ஊர் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். வேடசந்தூர் தேவி நாயக்கன்பட்டியில் நீண்ட காலமாக நடைபெற்று வரும் இந்த வினோத திருவிழா அன்று ஊர் மக்கள் அனைவருக்கும் கோவிலிலேயே அன்னதானம் வழங்குகின்றனர் . இந்த ஊரின் ஒற்றுமையான நிகழ்ச்சி எல்லாம், பார்ப்பவர் மட்டுமின்றி கேட்கும் மக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கின்றன என்றால் மிகை அல்ல.