மகாகும்பமேளாவில் கேரள மலைவாழ் மக்கள் பாரம்பரிய நடனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12பிப் 2025 05:02
மூணாறு; உத்திரபிரதேசத்தில் பிரயாக்ராஜில் நடக்கும் மஹா கும்பமேளாவில் கேரளாவை சேர்ந்த மலைவாழ் மக்களின் பாரம்பரிய நடனங்கள் பல இடம்பெற்றன.
அங்கு ஜன.13ல் துவங்கிய கும்பமேளா பிப்.26ல் நிறைவு பெறுகிறது. கும்பமேளாவில் பங்கேற்கும் பக்தர்களை மகிழ்விக்கும் வகையில் பாரம்பரியமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி மலைவாழ் மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளில், கேரளாவைச் சேர்ந்த மலைவாழ் மக்களின் பல்வேறு நடனங்கள் இடம் பெற்றன. குறிப்பாக இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே மறையூரில் குமிட்டாம்குழி பகுதியில் ஹில் புலயா இனத்தைச் சேர்ந்த மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்ற மலபுலயா நடனம் நடந்தது. அதேபோல் காசர்கோடு மாவட்டத்தில் மாவிலன் மலை வேட்டுவான் மக்களின் தனித்துவமான கலையான மங்கலம்களி, கண்ணூர் மாவட்டம் நானூர் நரிக்கோட்டு மலையில் கருச்சியா சமுதாயத்தினரின் கோலாட்டம் ஆகியவையும் இடம் பெற்றன. நிகழ்ச்சியில் பங்கேற்க மலைவாழ் மக்களைச் சேர்ந்த கலைஞர்கள் உள்பட 52 பேர் கொண்ட குழு, கேரள வனவாசி வளர்ச்சி மையம் எனும் அமைப்பின் மாநில துணைத்தலைவர் ஜெயதீப் தலைமையில் பிரயாக்ராஜ் சென்றனர் என்பது குறிப்பிடதக்கது.