திருவண்ணாமலை; திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், விடிய விடிய பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்றனர். திருவண்ணாமலையிலுள்ள, 2,668 அடி உயர, 14 கி.மீ., சுற்றளவு கொண்ட அண்ணாமலையார் மலையை, சிவனாக பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். இங்கு தினமும் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும், பவுர்ணமியில் லட்சக்கணக்கான பக்தர்களும் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை வழிபட்டு செல்கின்றனர். இதில், தை மாத பவுர்ணமி திதி நேற்று முன்தினம் இரவு, 7:51 மணி முதல், நேற்றிரவு, 8:12 மணி வரை இருந்ததால், விடிய விடிய பக்தர்கள் கிரிவலம் சென்றனர். மேலும், அருணாசலேஸ்வரர் கோவிலில், 6 மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். இவ்வாறு கிரிவலம் சென்ற பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப, ரயில்வே ஸ்டேஷன்களில் குவிந்தனர். அப்போது காட்பாடியிலிருந்து விழுப்புரம் மார்க்கம், விழுப்புரத்திலிருந்து காட்பாடி மார்க்கம் செல்லும், அனைத்து ரயில்களிலும் பக்தர்கள் முண்டியடித்து ஏறி சென்றனர்.