பதிவு செய்த நாள்
12
பிப்
2025
05:02
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில், குண்டம் விழாவை முன்னிட்டு மயான பூஜை நேற்று நள்ளிரவு நடந்தது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, ஆனைமலை மாசாணியம்மன் கோவில் குண்டம் திருவிழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வான மயான பூஜை நேற்று நள்ளிரவு நடந்தது. மாசாணியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் முடித்தவுடன், தலைமை முறைதாரர் மனோகர், மயான அருளாளி அருண் உள்ளிட்ட அருளாளிகள், அம்மனின் சூலம் மற்றும் பூஜை சாமான்களுடன் கோவிலிலிருந்து, ஆழியாற்றங்கரைக்கு சென்றனர். மயான பூஜைக்காக மண்ணால், மாசாணியம்மனின் உருவம் சயன கோலத்தில் அமைக்கப்பட்டிருந்தது. அருளாளி ஆற்றில், நீராடி தீர்த்தம் எடுத்து வந்தார். நள்ளிரவு, 2:00 மணிக்கு பம்பை, மேளதாளங்கள் முழங்க அம்மனின் திருஉருவத்துக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. அதன்பின், அருளாளி எடுத்து வந்த தீர்த்தம் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது. எலுமிச்சை மாலைகளால், அம்மனின் பீடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. பம்பைக்காரர்கள் பக்தி பாடல்களை பாடினர். அதிகாலை, 2:50 மணிக்கு அருளாளிக்கு அருள் வந்து, அம்மனின் திருஉருவத்தில் இருந்து எலும்புத்துண்டை எடுத்து வாயில் கவ்விக் கொண்டு, கையில் சூலாயுதத்துடன் ஆவேசமாக நடனமாடினார். மயான பூஜை அதிகாலை, 3:30 மணிக்கு முடிந்தது. பூஜையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து, இன்று காலை 7:00 மணிக்கு உப்பாற்றங்கரையில் கும்பஸ்தாபனம் நடந்தது. இதில், அம்மன் உருவத்தில் இருந்து எடுக்கப்பட்ட மண், சக்தி கும்பஸ்தாபனம் கலசத்துடன் கோவில் மூலஸ்தானத்தில் வைக்கப்பட்டது. பின் மகா பூஜை நடைபெற்றது. நாளை காலை, குண்டம் கட்டுதல், மாலையில் சித்திரத்தேர் வடம் பிடித்தல் மற்றும் இரவு, 10:00 மணிக்கு குண்டம் பூ வளர்த்தல் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை (14ம்தேதி) குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.