பழநி முருகன் திருவடி பட்ட ஒரு எலுமிச்சம் பழம் 5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14பிப் 2025 11:02
புதுக்கோட்டை; தைப்பூசம் அன்று பழநி முருகன் காலடியில் வைத்து பூஜை செய்யப்பட்ட எலுமிச்சம் பழம் ரூ.5 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போய் உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளத்தை சேர்ந்த பக்தர் ஏலம் எடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் வல்லநாட்டு செட்டியார் சமூகத்தினர் தைப்பூச நாளை விமர்சியாக கொண்டாடும் வகையில் தைப்பூசத்திற்கு முதல் நாளிலிருந்து தைப்பூசம் முடிந்து மறுநாள் வரை மூன்று தினங்கள் பழனியில் தங்கி பல்வேறு கட்ட நிகழ்ச்சிகளை நடத்தி சாமி தரிசனமும் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இவர்கள் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் அன்னதானம் சமைத்து வழங்கும்போதும் சாமி தரிசனம் உள்ளிட்டவற்றை செய்யும் பொழுதும் ஒவ்வொரு எலுமிச்சம்பழம் வைத்து பூஜை செய்வர். இந்த ஆண்டும் அதேபோல் ஒவ்வொரு எலுமிச்சம் பழம் வைத்து பூஜை செய்தனர். அந்த எலுமிச்சம் பழத்தை இன்று பழனியில் பெரியநாயகி அம்பாள் கோயில் அருகே உள்ள திருவரங்குளம் வல்லநாட்டு நகரத்தாருக்கு சொந்தமான பொது மடத்தில் வைத்து ஏலம் விட்டுள்ளனர். பூஜையில் வைக்கப்பட்ட ஒவ்வொரு எலுமிச்சம் பழமும் 16,000 முதல் 40,000 வரை ஏலம் போன நிலையில் ஏலத்தின் இறுதியாக தைப்பூச தினத்தன்று பழனி முருகன் திருவடியில் வைத்து பூஜை செய்த ஒரு அபிஷேக எலுமிச்சம் பழத்தை ஒரு நபர் 5 லட்சத்து 9 ஆயிரம் என்று ஏலம் எடுத்தது பலரையும் வியக்க வைத்துள்ளது.