பதிவு செய்த நாள்
14
பிப்
2025
12:02
குஜராத்; காதல் கைகூட, காதலிக்கு கடிதம் எழுதாவிட்டாலும், கடவுளுக்கு எழுதி, கோவில் உண்டியலில் போட்டால் போதும்; காதல் நிறைவேறும்... என்ற நம்பிக்கை, குஜராத் மாநிலத்திலுள்ள ஜெகந்நாதர் கோவிலுக்கு வரும் பக்தர்களிடையே உள்ளது. குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில், 450 ஆண்டு பழமையான ஜெகந்நாதர் கோவில் உள்ளது. வாட்ஸ் - அப், பேஸ்புக், டுவிட்டர் என காதலை வளர்ப்பதற்கும், காதலை தெரிவிப்பதற்கும், பல நவீன வசதிகள் இருந்தாலும், மக்களிடையே, இந்த கோவில் மீதுள்ள நம்பிக்கை குறையவில்லை. தேர்த் திருவிழாவுக்கு பிரசித்தி பெற்ற இக்கோவிலின் உண்டியலில், தங்களுடைய பிரார்த்தனையை கடிதமாக எழுதி போடும் வழக்கம், நீண்ட காலமாக உள்ளது. திருமணம், வேலை மற்றும் தேர்வில் நல்ல மதிப்பெண் என பல்வேறு கோரிக்கை கடிதங்கள், இக்கோவிலின் உண்டியலில் போடப்பட்டாலும், காதல் கைகூட வேண்டும் என்ற கோரிக்கைதான் மிக அதிகமாக உள்ளது... என்கின்றனர் கோவில் நிர்வாகிகள். காதல் கைகூடி, திருமணத்தில் முடியும்போது, மறக்காமல் திருமண பத்திரிகையையும், இந்த உண்டியலில் சேர்க்கின்றனர்.