திருக்கோஷ்டியூர் மாசி தெப்ப உற்ஸவம்; முன்னேற்பாடுகள் ஆலோசனை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
15பிப் 2025 09:02
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள் கோயிலில் மார்ச் 14ல் நடைபெற உள்ள மாசித்தெப்ப உற்ஸவத்திற்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டத்தை மாவட்ட அளவில் நடத்த பக்தர்கள் கோரியுள்ளனர். சிவகங்கை தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் ஆண்டுதோறும்மாசித் தெப்ப உற்ஸவம் 10 நாட்கள் நடைபெறும். லட்சக்கணக்கானோர் கூடி தெப்பத்தை தரிசிப்பதுஉண்டு. விழாவின் கடைசி மூன்று நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தெப்பக்குளக்கரை முதல் கோயில் வரை கூட்டம் காணப்படும். மாவட்டத்தில் பெரிய விழாவிற்கான முன்னேற்பாடுகள் போதாமல் பக்தர்கள் ஆண்டுதோறும் அவதிக்குள்ளாகின்றனர். சுவாமி தரிசனத்திற்கு கோயிலுக்குள் கட்டணம் செலுத்தி செல்லும் பக்தர்களுக்கு நிழல் மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தவும், மணிக்கணக்கில் தாமதமாவதைத் தவிர்க்க வி.ஐ.பி., தரிசனத்தை கட்டுப்படுத்தவும் பக்தர்கள் கோரியுள்ளனர்.
மேலும் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க ரோட்டோரத்தில் கடைகளை அனுமதிக்காமல் ரோட்டிற்கு வெளியே கடை வைக்கவும், திருப்புத்தூர் ரோட்டில் குறிப்பிட்ட தூரத்திற்கு போக்குவரத்து போலீசார் கண்காணிக்க வாகன நிறுத்தத்தை அடிப்படை வசதிகளுடன் அமைக்கவும், பரவலாக குடிநீர் விநியோகத்தையும் பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். முதியவர்கள், குழந்தைகள் நிற்க குறிப்பிட்ட இடங்களில் நிழற்கூரை வசதியும், சேகரமாகும் குப்பைகளை விரைந்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆண்டு தோறும் கடைசி நாட்களில் சம்பிரதாயமாக ஆலோசனைக் கூட்டம் நடத்தப்படுகிறது. அதிகரிக்கும் கூட்டத்திற்கேற்ப ஏற்பாடுகள் செய்யப்படுவதில்லை. இந்த ஆண்டு மார்ச் 14ல் தெப்பம் நடைபெற உள்ளது. உற்ஸவம் துவங்க 20 நாட்களே உள்ள நிலையில் விழா முன்னேற்பாடுகள்குறித்த ஆலோசனைக்கூட்டத்தை விரைவாக நடத்தி, நல்ல தீர்வு எடுக்க முன்வரவேண்டும்.