பதிவு செய்த நாள்
06
டிச
2012
11:12
வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த ஆயக்காரன்புலத்திலுள்ள சுயம்பு கலிதீர்த்த அய்யனார் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, நேற்று காலை வெகுவிமர்சையாக நடந்தது. நூறு ஆண்டுகள் பழமையான இந்த கோவிலில், பக்தர்கள் தங்கள் வேண்டுதல் காணிக்கையாக குதிரை, மனித உருவ பொம்மைகளை வைத்து வணங்கி வருகின்றனர். இந்நிலையில் கோவில் திருப்பணிகள் நடத்தப்பட்டு, நேற்றுக்காலை கும்பாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கடந்த, 2ம் தேதி முதல், மூன்று தினங்கள் நடந்த யாக சாலை பூஜையில் சிறப்பு வேதா, பாராயணமும், திருமறை பாராயணமும் நடந்தது.
இதைத்தொடர்ந்து நேற்றுக்காலை, 10 மணிக்கு புனித நீர் அடங்கிய கலசம் யாக சாலையிலிருந்து ஊர்வலமாக எடுத்து வந்து, விமான கலசங்களில் புனித ஊரை ஊற்றி, சிவாச்சாரியார்கள் வழிபாடு, பூஜைகளை செய்தனர். பரிவார தெய்வங்களான தூண்டிக்காரனார், வீரனார் ஸ்வாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், எம்.எல்.ஏ., காமராஜ், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் சிவானந்தம், துணைச் செயலாளர் சரவணன், கவுன்சிலர்கள் ரவிச்சந்திரன், சண்முகராசு, திருப்பணிக்குழு தலைவர் ஹரிகிருஷ்ணன், தக்கார் செந்தூர் பாண்டியன், செயல் அலுவலர் நீதிமணி உள்பட, 10 ஆயிரத்தும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.