பதிவு செய்த நாள்
06
டிச
2012
11:12
கூடுவாஞ்சேரி: நந்திவரம், நந்தீசுவரர் கோவில் குளத்தில், ஆக்கிரமிப்பு வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் குப்பை மற்றும் கழிவுநீர் விடப்படுவதால், சகதியாக காட்சியளிக்கிறது. புகழ்பெற்ற இக்கோவில் குளத்தை சீரமைத்து, பாதுகாக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நூற்றாண்டு பழமை...
நந்திவரம் - கூடுவாஞ்சேரி பேரூராட்சியில், நந்திவரம் பகுதியில் அமைந்துள்ளது சௌந்தர நாயகி உடனுறை நந்தீசுவரர் திருக்கோவில். இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில், நூற்றாண்டு பழமை வாய்ந்ததாகும். உற்சவம், பிரதோஷம், திருஆதிரை போன்ற காலங்களில், பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து, வழிபட்டு செல்கின்றனர். இக்கோவிலின் கிழக்கு நுழைவாயில் அருகே, மிகப்பெரிய பரப்பில் நந்தீசுவரர் குளம் அமைந்துள்ளது.
கழிவுநீர் கலப்பு: அப்பகுதியின் குடிநீர் ஆதாரமாக விளங்கிய இக்குளம், பராமரிப்பில்லாத காரணத்தால், கரைப்பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு, 30க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவைகளில் இருந்து, வெளியேற்றப்படும் கழிவுநீர் மற்றும் குப்பை அனைத்தும் கோவில் குளத்தில் விடப்படுகின்றன. இதனால், நீர் மாசடைந்து சகதியாக காட்சியளிப்பதுடன், துர்நாற்றம் வீசி வருகிறது. இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் கூறுகையில், "மிகப்பெரிய பரப்பு கொண்ட கோவில் குளம், ஆக்கிரமிப்புகளால் சுருங்கிவிட்டது. குளம் முழுவதும் ஏராளமான செடி, கொடிகள் முளைத்து புதர் மற்றும் சகதியாக காட்சியளிப்பதால், பக்தர்கள் கோவில் குளத்தை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது, என்றார்.
ஆக்கிரமிப்பு: மேலும், "குளத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு இங்குள்ள சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இப்பிரச்னையில், அரசு தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, கூறினார். கோவில் செயல் அலுவலர் வடிவேல் கூறுகையில்,"கோவில் மற்றும் குளத்தினை சுற்றியுள்ள இடங்களை அப்பகுதியை சேர்ந்த சிலர், ஆக்கிரமித்து குடிசைகள் அமைத்துள்ளனர். இதை அகற்ற கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இருப்பினும், குளத்தினை சீரமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டு, நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.