பதிவு செய்த நாள்
18
பிப்
2025
10:02
மயிலாடுதுறை; தருமபுரம் ஆதீனம், சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும், 6-வது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாடு, மே3-லிருந்து 5-ம் தேதி வரை சென்னை காட்டாங்குளத்துரில் நடைபெறுகிறது என தருமபுரம் ஆதீனம் தெரிவித்துள்ளார்.
தருமபுரம் ஆதீன திருமடத்தில் செய்தியாளர்களை சந்தித்த, 27வது குருமகா சன்னிதானம் கயிலை ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் கூறியதாவது: செந்தமிழும் சிவநெறியும் வளர்க்கும் ஞான பண்ணையாக விளங்கி, சைவ சித்தாந்தத்தை உலகெங்கும் பரவச் செய்யும் நோக்கோடு, தருமையாதீனம் 26-வது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் 1984-ம் ஆண்டு அனைத்துலக சைவ சித்தாந்த ஆராய்ச்சி நிறுவனத்தை தொடங்கினார். இந்நிறுவனத்தின் சார்பில் இதுவரை 5 மாநாடுகள் தருமபுரம், மலேசியா, வாரணாசி, மதுரை, சென்னை ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளன. சென்னை முதல் கன்னியாகுமரி வரை தருமையாதீன சைவசித்தாந்த மாலை நேரக்கல்லூரி தொடங்கப்பெற்று சித்தாந்த வகுப்புகள் நடைபெற்று வருகின்றது. தற்போது தருமையாதீனமும், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக நிறுவன வேந்தர் டி.ஆர்.பாரிவேந்தரும் இணைந்து, 6-வது அனைத்துலக சைவசித்தாந்த மாநாடு பல்கலைக்கழக தமிழ்ப்பேராயத்துடன் சென்னை, காட்டாங்குளத்தூரில் மே 3, 4, 5 ஆகிய தேதிகளில் நடத்தப்படவுள்ளது. "சங்க இலக்கியங்கள் முதல் சமகால இலக்கியம் வரை சித்தாந்தப் பதிவுகள்" எனும் பொதுத் தலைப்பின் கீழ் கருத்தரங்கம் நடைபெற உள்ளது.
இம்மாநாட்டில் சைவ ஆதீனங்களின் குருமகாசந்நிதானங்கள், பாரதப் பிரதமர், ஆளுநர்கள், முதல்வர்கள், உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற நீதியரசர்கள், உள்நாட்டு, வெளிநாட்டு அமைச்சர்கள், சிவாச்சாரியர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், சைவசமய அறிஞர்கள், ஆலய அறங்காவலர்கள், ஆலய நிர்வாகிகள், சமய ஆர்வலர்கள், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, லண்டன், ஜெர்மன், சுவிட்சர்லாந்து, நியூசிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, நைஜீரியா, மொரிசியஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலிருந்தும் அறிஞர்களும், ஆர்வலர்களும் பங்கேற்கின்றனர். இம்மாநாட்டுக்கான சிறப்பு மலர், ஆய்வாளர்களின் ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய ஆய்வுக் கோவை, பத்துக்கும் மேற்பட்ட நூல்கள் ஆகியன வெளியிடப்படவுள்ளன. மாநாட்டினை முன்னிட்டு முதல் கட்டமாக சிறப்பு மலர்குழு, கருத்தரங்க குழு, நூல்வெளியீட்டு குழு என மூன்று குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்தும், அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள், சான்றோர்கள் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.