பதிவு செய்த நாள்
24
பிப்
2025
11:02
பெ.நா.பாளையம்; ‘‘அதர்மத்தை சுட்டிக் காட்டுவது கூட தர்மம் தான். சுட்டிக் காட்டாமல் இருப்பது தான் அதர்மம்,’’ என, மாதா அமிர்தானந்தமயி தேவி பேசினார்.
கோவை கவுண்டம்பாளையம் அருகே உள்ள நல்லாம்பாளையம் அமிர்த வித்யாலயா வளாகத்தில் உள்ள பிரம்மஸ்தான கோவிலின், 24வது ஆண்டு விழாவில், மாதா அமிர்தானந்தமயி தேவி பங்கேற்றார். பின்னர் பக்தர்களிடையே அவர் பேசியதாவது: வாழ்க்கையை கடல், கவிதை, கனவு, நீண்ட நதி உள்ளிட்ட பல்வேறு நிலைகளுடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால், வாழ்க்கையானது பொறுமை, பணிவு, தியாகம், அனைத்தையும் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மையே என்பதை உணர வேண்டும். ஆணவத்தை அழித்து, பிறர் மீது அன்பு செலுத்தி பணிவுடன் வாழ்வதே வாழ்க்கை. இதனால்தான் இயற்கையாகவே பணிவுடன் யார் வாழ்கிறார்களோ, அவர்களை நோக்கி, நம் வாழ்க்கை செல்கிறது.
இயற்கையிடமும், பிற மனிதர்களிடமும் நாம் தலை வணங்க வேண்டும். அப்படி தலை வணங்காமல் இருப்பது தான், இன்றைய எல்லா பிரச்னைக்கும் காரணம். விட்டுக்கொடுத்து செல்வதால் தான், சமுதாயத்தில் நல்லிணக்கம் ஏற்படும். இறைவனுடைய அருள் இல்லாமல், நம்மால் வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது. இந்த உலகில், நம் வாழ்க்கை எப்போது முடியும் என்பது தெரியாது. எனவே, இந்த உலகத்தில் நாம், நம்முடைய நல்ல பதிவுகளை விட்டுச் செல்ல வேண்டும். சூழ்நிலைகளை உள்வாங்கி அதற்கு ஏற்ப, நம்முடைய வாழ்க்கையை மாற்றி, அமைத்துக் கொண்டு, வெற்றி பெற முயல வேண்டும். தன்னிடம் இருந்து வெளிப்படும் கோபம், சொல்லாகவோ அல்லது செயலாகவோ பிறரை காயப்படுத்துகிறது. அது போன்ற நிலை ஏற்படாமல், எப்போதும் விழிப்புணர்வுடன் இருந்து கோபத்தை கட்டுப்படுத்தும் நபராக நாம் இருக்க வேண்டும். அதர்மத்தை சுட்டிக் காட்டுவது கூட தர்மம் தான். சுட்டிக் காட்டாமல் இருப்பது தான் அதர்மம். எந்த ஒரு செயலும் வெற்றியடைய, முயற்சி, குறித்த காலத்தில் அதை செயல்படுத்துதல், இறைவனுடைய அருள் ஆகிய மூன்றும் இருக்க வேண்டும். பிறருக்கு நம்மால் கொடுத்து உதவ முடியும் என்ற மனப்பான்மை அனைவருக்கும் வந்துவிட்டால், இந்த உலகமே சொர்க்கம் ஆகும். ஆன்மிக கோட்பாடுகள் சரியாக புரிந்து கொள்ளப்பட்டால், அனைவரும் கருணை உள்ளத்துடன் செயல்படுவார்கள். ஆடம்பரத்துக்கும், தேவைக்கும் உள்ள வேற்றுமையை உணர்ந்து செயல்பட வேண்டும். இதனால் பொருளாதார சிக்கல் இல்லாமல் நிம்மதியாக வாழலாம். போதைப்பொருள் பயன்படுத்துவது ஒரு கொடுமையான பழக்கம். அதனால் வாழ்க்கையில் எல்லா வகை துன்பங்களும் வந்து நம்மை சீரழிக்கும். இவ்வாறு, மாதா அமிர்தானந்தமயி தேவி பேசினார்.