பதிவு செய்த நாள்
26
பிப்
2025
04:02
கும்பகோணம் ; இராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோயிலில் மகா சிவராத்திரி விழாவையொட்டி 1,008 சங்காபிஷேகம் ஆராதனை சிறப்பாக நடைபெற்றது.
கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில் பிறையணி அம்மன் சமேத நாகநாத சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது நவக்கிரக ஸ்தலங்களில் ராகு பகவானுக்குரிய ஸ்தலமாக போற்றப்படும் இத்தலத்தில் ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழா, விசேஷ ஹோமம், 1,008 சங்காபிஷேகம் தொடர்ந்து இரவு முழுவதும் நான்கு கால அபிஷேகம் ஆராதனைகள் என சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.
அதன்படி மாசி மாதம் மகாசிவராத்திரி தினமான இன்று இரு புனிதநீர் நிரப்பிய கடங்களை சுவாமி அம்பாளாக ஸ்தாபித்த பிறகு, புனித நீர் நிரப்பிய 1,008 வலம்புரி சங்குகளை நெல்மணிகள் மீது வைத்து, அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து, மலர்கள் சூட்டி, சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க விசேஷ ஹோமம் வளர்த்து, அதன் நிறைவாக, பூர்ணாஹீதியும் பின்னர் மங்கள வாத்தியங்கள் முழங்கப்பட்டது. கடம் புறப்பாடு நடைபெற்று, நாகநாதசுவாமிக்கு பல்வேறு மிதமான வாசனை திரவியங்களைக் கொண்டு அபிஷேகமும், தொடர்ந்து 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கலசத்தில் உள்ள நீரை கொண்டு, சுவாமிக்கும், அம்பாளுக்கும் மகா அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து சிறப்பு பட்டு மற்றும் மலர் அலங்காரத்தில் அருள்பாலித்த நாகநாதசுவாமிக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து மகிழ்ந்தனர்.