பதிவு செய்த நாள்
27
பிப்
2025
10:02
உடுமலை:திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில், மஹா சிவராத்திரி தினமான நேற்று, பாரம்பரிய முறைப்படி, திருச்சப்பரம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள திருமூர்த்தி மலையில், மலைமேல் பஞ்சலிங்க சுவாமி கோவில், மலையடிவாரத்தில் தோணியாற்றின் கரையில், அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. நுாற்றாண்டுகள் பழமையான, பிரசித்தி பெற்ற இக்கோவிலில், மூலவர் கோபுரம் ஆண்டுக்கு ஒருமுறை, மஹா சிவராத்திரியன்று நிறுவப்படுவது பாரம்பரியமாக உள்ளது.
பூலாங்கிணர் கிராமத்தில், மும்மூர்த்திகளுக்கு உகந்த மரங்களால், மூன்று கலசங்களுடன் திருச்சப்பரம் கிராம மக்களால் உருவாக்கப்பட்டது. நேற்று காலை, சிறப்பு பூஜைகளுக்குப் பின், திருச்சப்பர திருவீதி உலா துவங்கியது. வேளாண் வளம் செழிக்க, தாங்கள் விளைவித்த, நெல், மொச்சை, சுண்டல், கொள்ளு என தானியங்கள், பழம் மற்றும் காய்கறிகள், உப்பு ஆகியவற்றை சப்பரத்தின் மீது வீசி வழிபட்டனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள், சப்பரத்துடன், பாதயாத்திரையாக கோவிலுக்கு வந்தனர். திருச்சப்பரம் திருமூர்த்தி மலை கோவில் நுழைவுப்பகுதியாக யானைக்குன்று பகுதிக்கு வந்ததும், வனப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் மக்கள், பாரம்பரிய இசைக்கருவிகள் முழங்க, திருச்சப்பரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து, பக்திப் பரவசத்துடன், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ, அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நிறுவப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.