பதிவு செய்த நாள்
27
பிப்
2025
10:02
சென்னை; மகா சிவ ராத்திரியை முன்னிட்டு, சென்னை, புறநகரில் உள்ள சிவ ஆலயங்களில், நான்கு கால பூஜைகள், சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின. இதில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர்.
சிவனுக்குரிய விரதங்களாக, மாத, நித்ய, யோக, மகா சிவராத்திரி என ஆண்டு முழுவதும் பல சிவராத்திரிகள் உள்ளன. இதில், மகா சிவராத்திரி விரதம் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன. மாசி மாதம், தேய்பிறை சதுர்த்தசி நாளையே மகா சிவராத்திரியாக கொண்டாடப்படுகிறது. ராத்திரி என்ற சொல்லுக்கு, அனைத்தும் செயலற்று ஒடுங்குதல் என்று பொருள். உயிர்கள் செயலற்று, ஈசன் நினைவாக ஒடுங்கும் காலமே சிவராத்திரி. இந்த புண்ணிய காலத்தில் சிவனின் நாமம் கூறி, நான்கு கால பூஜைகள் செய்து வழிபடுவது வழக்கத்தில் உள்ளது. மகா சிவராத்திரி நாளில், மூன்றாம் காலத்தில் ஈசனை வழிபட்டால் பாவங்கள் நம்மை விட்டுவிலகும் என்பது நம்பிக்கை.
வடபழனி முருகன் கோவில்: வடபழனி முருகன் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு முதல் கால பூஜை இரவு 8:30 மணிக்கும், இரண்டாம் கால பூஜை இரவு 11:00 மணிக்கும், மூன்றாம் கால பூஜை நள்ளிரவு 1:00 மணிக்கும், நான்காம் கால இன்று அதிகாலை 3:00 மணிக்கும் நடந்தது. இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். வடபழனி முருகன் கோவிலில் மகாசிவராத்திரி விழாவை முன்னிட்டு, நேற்று இரவு முதல் விடிய விடிய சிறப்பு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் சார்பில் ஆர்.கே.மடம் சாலையில் உள்ள கபாலீஸ்வரர் கோவில் மைதானத்தில் மகா சிவாரத்திரி விழாவை அறநிலையத்துறை சேகர்பாபு நேற்று மாலை துவக்கி வைத்தார். இதில், வாய்ப்பாட்டு, தாளவாத்தியம், பக்திப் பாடல்கள், பரதநாட்டியம், சொற்பொழிவு, சிவ உபதேசம் உள்ளிட்ட பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவில் பங்கேற்ற பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன. அதேபோல, சென்னை, திருவான்மியூர் மருந்தீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜசுவாமி, வேளச்சேரி தண்டீஸ்வரர், மாடம்பாக்கம், தேனுபுரீஸ்வரர், மாங்காடு வெள்ளீஸ்வரர்; பள்ளிக்கரணை ஆதிபுரீஸ்வரர் உள்ளிட்ட சிவ ஆலயங்களில் நான்கு கால பூஜைகள் அபிஷேகங்கள், ஆராதனைகள் விமர்சையாக நடந்தன. மேலும், சொற்பொழிவு, பட்டிமன்றம், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இவ்விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.