பதிவு செய்த நாள்
27
பிப்
2025
04:02
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை ஆகிய பகுதிகளில், பல்வேறு சிவன் கோவில்களில், மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
காரமடையில், ஹிந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், மகா சிவராத்திரி விழா நடந்தது. நேற்று இரவு மாலை, 7:00 மணிக்கு ருத்ரா பூஜையுடன் மகா சிவராத்திரி பூஜை துவங்கியது. இரவு, 11:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, நள்ளிரவு, 12.30 மணிக்கு பெள்ளாதி சங்கமேஸ்வரர் கோவிலில் பூஜையும், அதிகாலை, 2:00 மணிக்கு நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் மூன்றாம் கால பூஜை, விடியற்காலை, 5:00 மணிக்கு நான்காம் கால பூஜை ஆகிய பூஜைகள் நடைபெற்றன. 16 வகை வாசனை திரவியங்களால், சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. கோவில் அர்ச்சகர் அஸ்வின் சிறப்பு பூஜைகளை செய்தார். விழா ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சந்திரமதி, அறங்காவலர் குழு தலைவர் தேவ் ஆனந்த், அறங்காவலர்கள் ராமசாமி, கார்த்திகேயன், சுஜாதா ஜவகர், குணசேகரன் ஆகியோர் செய்து இருந்தனர்.
மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் சாலை, சுக்குகாபிகடை பகுதியில் மகா சித்தர் பீடம் உள்ளது. இங்கு மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு, பல்வேறு வாசனை திரவியங்களால், வைத்தீஸ்வரர் சுவாமிக்கு நான்கு கால அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. அதைத் தொடர்ந்து அலங்கார பூஜை நடந்தது. ஆலயத்தில் உள்ள அகத்தியர், போகர், 18 சித்தர்கள், பாலாம்பிகை, தன்வந்திரி பெருமாள், முருகர் , விநாயகர் ஆகிய சுவாமிகளுக்கும் சிறப்பு அலங்காரம் பூஜைகள் செய்தனர்.
மேட்டுப்பாளையம் எஸ்.எம்.,நகரில் மாதேஸ்வரன் கோவிலில் வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இந்த கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால அபிஷேக பூஜைகள் நடைபெற்றன. பின்பு சுவாமிக்கு அலங்காரம் செய்து சிறப்பு பூஜை செய்தனர். இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிறுமுகை அருகே ஆலாங்கொம்பு வீராசாமி நகரில், வீரபத்திர சுவாமி கோவில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரி விழா, கணபதி ஹோமத்துடன் துவங்கியது. மாலை, 4:35 மணிக்கு கொடியேற்றமும், தீபாரத்தனையும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து ஆலாங்கொம்பில் உள்ள செல்வ விநாயகர் கோவிலில் இருந்து, முளைப்பாரியும், சக்தியும் அழைத்து வந்தனர். இரவு, 7:00 மணிக்கு ஆன்மீக சொற்பொழிவும், பலகுரல் கலை நிகழ்ச்சியும் நடந்தது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு கல்வி பரிசுகள் வழங்கப்பட்டன. பின்பு இரவு மகா சிவராத்திரி அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெற்றன. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிறுமுகை அடுத்த அன்னதாசம்பாளையத்தில் மாதேஸ்வரன் கோவில் உள்ளது. இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு, நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. பால், தயிர், இளநீர், மஞ்சள், குங்குமம் உட்பட, 16 வகை திரவியங்களால் சுவாமிக்கு அபிஷேகம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து விடியற்காலை, 4:00 மணிக்கு சுவாமிக்கு அர்த்தநாரீஸ்வரர் அலங்காரம் செய்யப்பட்டது. அர்ச்சகர் வெங்கடசாமி சிறப்பு பூஜைகளை செய்தார். இவ்விழாவில் கோவில் தர்மகர்த்தா, நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே சக்தி விநாயகர் கோவிலில், வெள்ளியங்கிரி ஆண்டவர் சன்னதி உள்ளது. இங்கு மகா சிவராத்திரியை முன்னிட்டு, வெள்ளியங்கிரி ஆண்டவருக்கு, நான்கு கால சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. நேற்று காலை அலங்கார பூஜையும், பேரொளி வழிபாடும், பஞ்ச தூப தீபாராதனை, திருமுறை விண்ணப்பம் ஆகியவை நடைபெற்றன. சிறப்பு பூஜை செய்த பின்பு பக்தர்களுக்கு திருநீற்று பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்கள் அறக்கட்டளையினர் செய்திருந்தனர்.