பதிவு செய்த நாள்
04
மார்
2025
01:03
‘கல்லிலே கலைவண்ணம் கண்டான்’ என்ற பாடல் வரிக்கு ஏற்ப கர்நாடகாவில் உள்ள ஏராளமான கோவில்கள், பல கலை வண்ணங்களை எடுத்து காட்டும் வகையில் உள்ளது. பெரும்பாலான கோவில்கள் மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை. அந்த காலத்து கட்டட கலை என்றால் சொல்லவா வேண்டும். பக்தர்கள் மனதை மயக்கும் வகையில் கோவில்கள் இருக்கும். பெங்களூரு ராஜராஜேஸ்வரி நகர் ரெம்கோ பெல் லே – அவுட் ஐடியல் ஹோம் சதுக்கம் 12 வது கிராஸ் ரோட்டில் உள்ளது, ஸ்ரீ நிமிஷாம்பா கோவில். இக்கோவில் 2006 ம் ஆண்டு மே மாதம் திறக்கப்பட்டது. இந்த கோவில் லேட்டரைட் கற்களை பயன்படுத்தி கட்டப்பட்டது. லேட்டரைட் என்றால் பாறைகள் மற்றும் தாதுக்களின், வானிலை மற்றும் சிதைவால் உருவாகும் வண்டல் பாறை வகையாகும். இதில் இரும்பு மற்றும் அலுமினிய ஆக்சைடுகள் நிறைந்து உள்ளன. இந்த கற்கள் தனித்துவமாக பழுப்பு, சிவப்பு நிறத்தை அளிக்கிறது. இந்த தனித்துவமான கட்டட கலை கொண்ட கோவில்களை கேரளாவில் அதிகம் பார்க்கலாம். தென்னிந்தியாவின் புகழ்பெற்ற கோவில் கட்டட கலைஞர் கனிபாயூர் கிருஷ்ணன் நம்பூதிரி தான் கோவிலுக்கு வடிவமைப்பு ஏற்படுத்தி கொடுத்தார்.
நிமிஷாம்பா என்ற பெயருக்கு நிமிஷா என்றால் ஒரு நிமிடம், அம்பா என்றால் பார்வதியின் பெயர் என்று பொருள்படுகிறது. இதனால் நிமிஷாம்பா பார்வதி தேவியின் அவதாரமாக கருதப்படுகிறார். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் நிமிஷாம்பா தேவியை மனம் உருகி வேண்டி கொண்டால் கவலைகள் நீங்கி போகும் என்று நம்புகின்றனர். கோவிலில் நிமிஷாம்பா தேவி சிலை மட்டுமின்றி சித்தி விநாயகர், லட்சுமி நாராயணா, மவுக்தீஸ்வரர், சரஸ்வதி, தட்சிணாமூர்த்தி, நாகதேவதை, ஆஞ்சநேயர், நவக்கிரக சிலைகளும் உள்ளன. கோவிலின் நடை தினமும் காலை 6:30 மணி முதல் மதியம் 1:30 மணி வரையும்; மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 மணி வரையும் திறந்திருக்கும். கோவிலில் சிறப்பு பூஜை, தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் 99451 01112, 99032 77944 என்ற மொபைல் நம்பருக்கு தொடர்பு கொண்டு பேசலாம். info@nimishambadevi.com இது கோவிலின் இணைய முகவரி. மெஜஸ்டிக் பஸ் நிலையத்தில் இருந்து, பெல் லே – அவுட்டிற்கு அடிக்கடி பி.எம்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுகின்றன. – நமது நிருபர் –