பதிவு செய்த நாள்
04
மார்
2025
01:03
கடற்கரை மாவட்டமான தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரின் உர்வாவில் அமைந்துள்ளது 800 ஆண்டு பழமையான ஸ்ரீ மாரியம்மன் கோவில். நாட்டுப்புற கதைகள் மற்றும் முன்னோர்களின் கூற்றுப்படி, பண்டைய கர்நாடகாவின் மொகவீரஸ் கிராமத்தில் வசித்த ‘சுல்லி குரிகாரா’ குடும்பத்தை சேர்ந்தவர், வணிக நிமித்தமாக வெளியூர் சென்றிருந்தார்.
அசரீரி; மீண்டும் வீடு திரும்பும்போது, ஏதோ தெய்வீக சக்தி தன்னை பின் தொடர்வதாக உணர்ந்தார். நம்மூர்களில் ‘அம்மன் நமது உடம்புக்குள்’ புகுவது போன்று உணர்ந்து, ஆட துவங்குவர். அதுபோன்று அவர் உடம்பும் ஆட துவங்கியது. அப்போது, ‘நீ வசிக்கும் ஊருக்கு என்னை அழைத்து செல்’ என்று அசரீரி கேட்டுள்ளது. அவரும் தன் கிராமத்துக்கு சென்றார்; கிராமத்துக்கு சென்றவுடன் தன் சுய நிலைக்கு திரும்பினார். மாரியம்மன் தான் தன்னுள் புகுந்தார் என்பதை உணர்ந்த அவர், கோவில் கட்ட முடிவு செய்தார். தினமும் பூஜைகள் நடந்தன. சில காலம் கழிந்தது. ஒரு காலத்தில், கடலில் மீன் பிடிக்க சென்ற மீனவர்களுக்கு, மீன்கள் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதனால், ஏழு கிராமங்களை சேர்ந்த மீனவர்கள், மாரியம்மன் கோவிலுக்கு வந்து வழிபட்டனர்.
ஆச்சரியம்; என்ன ஒரு ஆச்சரியம், அடுத்த நாள் மீன் பிடிக்க சென்றவர்கள், படகு நிறைய மீன்களை அள்ளி வந்தனர். அதுபோன்று, கடல் சீற்றம் காரணமாக மீன் பிடிக்க முடியாமல் தவித்த போதும் கூட, மீனவர்கள் அம்மனை வேண்டி வணங்கினர். கடல் சீற்றம் மெல்ல குறைந்து சகஜ நிலைக்கு திரும்பியது. இதற்கு அம்மனின் சக்தி தான் காரணம் என்று நம்ப துவங்கினர். அன்று முதல் ஆண்டுதோறும் அம்மனுக்கு விழா எடுத்து வருகின்றனர். கோவிலில் நடக்கும் அனைத்து விழாக்களையும், ‘மீனவ சமுதாயத்தின்’ தலைவர் குடும்பத்தினரே இன்று வரை நடத்தி வருகின்றனர். திருவிழாக்களில் தங்கள் வேண்டுதல் நிறைவேற, உருளு சேவை, துலாபாரம் என பல நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இன்றும் மாரியம்மனை கண்கண்ட தெய்வமாக போற்றி வணங்குகின்றனர். – நமது நிருபர் –