பதிவு செய்த நாள்
05
மார்
2025
12:03
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, கடந்த மாதம், 11ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கடந்த, 18ம் தேதி கம்பம் நடுதல், 28ம் தேதி முதல் நேற்று வரை விரதமிருந்த பக்தர்கள் பூவோடு எடுத்து அம்மனை வழிபட்டனர். இன்று, காலை, 6:00 மணிக்கு மாவிளக்கு, காலை, 10:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு, 7:00 மணிக்கு முதல் நாள் தேரோட்டம் துவங்குகிறது. கோவில் வளாகத்தில் துவங்கி, வெங்கட்ரமணன் வீதியில் முதல் நாள் தேர் நிறுத்தப்படுகிறது. நாளை மாலை அங்கிருந்து தேரோட்டம் துவங்கி, சத்திரம் வீதியில் நிறுத்தப்படுகிறது. வரும், 7ம் தேதி மூன்றாம் நாள் தேரோட்டம் அங்கிருந்து துவங்கி, கோவிலில் நிலை நிறுத்தப்படுகிறது. தொடர்ந்து, பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது. வரும், 8ம் தேதி காலை, மஞ்சள் நீராடுதல், இரவு, கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், 10ம் தேதி இரவு, மஹா அபிேஷகத்துடன் விழா நிறைவு பெறுகிறது.
கண்காணிப்பு தீவிரம்; மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு, நேற்று பக்தர்கள், கலசத்தில் புனித நீர் எடுத்து வந்து வழிபாடு செய்தனர். மேள, தாளத்துடன், புனித நீரை ஊர்வலமாக கொண்டு வந்து, அம்மனை வழிபட்டனர். இதனால், பொள்ளாச்சி பகுதியே நேற்று முதல் திருவிழாக்கோலம் பூண்டுள்ளது. திருவிழாவில் அசம்பாவிதம் தவிர்க்கவும், பாதுகாப்பு நடவடிக்கைக்காகவும், கண்காணிப்பு கேமராக்கள் அமைத்து போலீசார் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர். கூடுதல் எஸ்.பி., சிருஷ்டி சிங் தலைமையில், போலீசார், ஊர்காவல் படையினர் என, 100க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
போக்குவரத்து மாற்றம்; தேரோட்டம் துவங்குவதையடுத்து முதல் நாளான இன்று, கோட்டூர் ரோட்டில் வரும் வாகனங்கள், பெட்ரோல் பங்க் அருகே செல்லும் ஊத்துக்காடு ரோடு, பத்ரகாளியம்மன் கோவில் ரோடு, உடுமலை ரோடு வழியாக பஸ் ஸ்டாண்ட்டுக்கு திருப்பி விடப்படுகின்றன. அதுபோன்று, கூட் ெஷட் ரோடு, திருவள்ளுவர் திடல் வழியாகவும் வாகனங்கள் செல்ல போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. வெங்கட்ரமணன் வீதியில் தேர் நிலை நிறுத்தப்பட்ட பின், திருவள்ளுவர் திடலில் இருந்து வரும் வாகனங்கள், இடதுபுறமாக திரும்பி நகராட்சி அலுவலகம் வழியாக பாலக்காடு ரோட்டை அடையலாம். மேலும், கோட்டூர் ரோட்டில் இருந்து ஆனைமலை செல்லும் வாகனங்கள், மோதிராபுரம் பிரிவில் இருந்து இடது புறமாக திரும்பி, ஆனைமலை ரோட்டை அடையலாம். நாளை, உடுமலை ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் வரும் வாகனங்கள், பல்லடம் ரோடு, நியூஸ்கீம் ரோடு வழியாக செல்ல வேண்டும். மூன்றாம் நாள், சத்திரம் வீதியாக வரும் வாகனங்கள், பார்க் ரோடு வழியாக மாற்றம் செய்யப்படும், என போக்குவரத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல் தெரிவித்தார். மேலும், தேர் நிறுத்தப்பகுதியில், துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.