ராஜராஜசோழனின் மகன் ராஜேந்திரசோழனால் ஏற்படுத்தப்பட்ட நகரம் கங்கை கொண்ட சோழபுரம். சோழர்காலத்தில் சிங்கப்பூர், மலேசியா, இலங்கையும் இவரது ஆட்சியின் கீழேயே இருந்தது. அந்த பகுதிக்கெல்லாம் தலைநகர் இவ்வூர் தான். இங்குள்ள புகழ் பெற்ற பிரகதீஸ்வரர் கோயில் அருகே, கணக்கு விநாயகர் கோயில் உள்ளது. இதையும் ராஜேந்திரசோழனே உருவாக்கினார். தன் அரண்மனை பகுதியில் அமைந்திருந்த இந்த விநாயகரை, தினமும் வணங்கிய பிறகே பணிகளைத் துவக்குவாராம். கங்கைகொண்ட சோழபுரத்தில் பெரிய கோயில் கட்டிய காலத்தின் கோபுரம் கட்டிய செலவை, தன் மந்திரியிடம் கேட்டார் மன்னர். மறுநாள் சொல்வதாக மந்திரி கூறினார். எத்தனையோ தடவை கணக்குப்பார்த்தும் சரியாக வரவில்லை. மறுநாள், மன்னரிடம் தவறாகக் கணக்கு சொன்னால் ஊழல் பிரச்னையாகி விடுமே என பயந்திருந்தார் மந்திரி. அன்று இரவில், மந்திரிக்கு இந்த பிள்ளையாரே வந்து சரியாக சொன்னார். இதனால் இவருக்கு கணக்கு விநாயகர் என்று பெயர். இது ஒரு அற்புதமான சிலை. கணக்கு பாடத்தில் நூற்றுக்கு நூறு வாங்க, இவரை வணங்க வருகிறார்கள் மாணவர்கள்.