பதிவு செய்த நாள்
07
மார்
2025
11:03
வால்பாறை; காமாட்சியம்மன் கோவில் திருவிழா, கொடியேற்றத்துடன் துவங்கியது. வால்பாறை வாழைத்தோட்டம் ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலின், 57ம் ஆண்டு திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமமும், 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜையும், 9:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது. தொடர்ந்து காலை, 10:30 மணிக்கு, 10வது வார்டு கவுன்சிலர் காமாட்சி முன்னிலையில் கோவில் தலைவர் மருதமுத்து, திருக்கொடியேற்றினார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவில் வரும், 13ம் தேதி காலை, 10:00 மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இருந்து, ஏகாம்பரஈஸ்வரரை கைலாய சிவ வாத்தியங்கள் முழங்க, மாப்பிள்ளை (சிவபெருமான்) அழைத்து கோவிலுக்கு பக்தர்கள் ஊர்வலமாக செல்கின்றனர். காலை, 11:30 மணிக்கு அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுகிறது. தொடர்ந்து பகல், 1:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. வரும், 14ம் தேதி மாலை, 6:00 மணிக்கு அலங்கரிக்கபட்ட தேரில் அம்மன் எழுந்தருளி, திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவிற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள் கணேசன், கோபால், ரமேஷ், செல்வக்குமார், குமரேசன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.