பதிவு செய்த நாள்
07
மார்
2025
12:03
பொள்ளாச்சி; பொள்ளாச்சி மாரியம்மன் கோவிலில், இரண்டாம் நாள் தேரோட்டம் நேற்று நடந்தது. தேர் சக்கரத்துக்கு உப்பு, மிளகு கொட்டி பக்தர்கள் வழிபாடு செய்தனர்.
பொள்ளாச்சியில் உள்ள, பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் தேர்த்திருவிழா கடந்த மாதம், 11ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. கம்பம் நடுதல், பூவோடு வைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் துவங்கியது. 12 அடி உயரம் உள்ள மரத்தேரில் விநாயகரும், 21 அடி உயரம் உள்ள வெள்ளித்தேரில் மாரியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவிலில் இருந்து மார்க்கெட் வீதி வழியாக உலா வந்த தேர், வெங்கட்ரமணன் வீதியில் நிறுத்தப்பட்டது. தேரின் சக்கரத்தில் உப்பு, மிளகு கொட்டி பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர். தொடர்ந்து, நேற்று வெங்கட்ரமணன் வீதி, உடுமலை ரோடு வழியாக உலா சென்று, சத்திரம் வீதியில் நேற்றிரவு தேர் நிறுத்தப்பட்டது. இன்று, மூன்றாம் நாள் தேரோட்டம் துவங்கி, கோவிலில் நிலை நிறுத்தப்படுகிறது. தொடர்ந்து, அம்மன் பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது. நாளை, 8ம் தேதி அம்மன் மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், வரும், 10ம் தேதி மஹா அபிஷேக வழிபாடு நடக்கிறது.