சபரிமலையில் பக்தர்களுக்கு புதிய வசதி; தரிசன வழி மாற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2025 11:03
திருவனந்தபுரம்: சபரிமலை கோவிலில் பக்தர்கள் வசதிக்காக தரிசன வழி மாற்றப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மார்ச் 14ம் தேதி பங்குனி மாத பூஜைக்காக நடை திறக்கப்படுகிறது. அதன் பின்னர் 15ம் தேதி முதல் மார்ச் 19ம் தேதி வரை தினமும் பூஜைகள் நடைபெறும்.
இந்நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பிரசாந்த் நிருபர்களிடம் கூறியதாவது; பங்குனி மாத பூஜையின் போது பக்தர்கள் 18ம் படி ஏறி கொடிமரத்தில் இருந்து நேராக கோவிலில் நுழைந்து சாமி தரிசனம் செய்யலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இனி மேம்பாலத்தை சுற்றி வந்து தரிசனம் செய்ய ஆகும் நேரம் மிச்சப்படும். தற்போதைய சூழலில் 80 சதவீதம் பக்தர்களுக்கு முழு தரிசனம் கிடைக்காமல் இருந்தது. எதிர்காலத்தில் அப்படி இருக்காது. இந்த நடைமுறை மூலம் ஒவ்வொரு பக்தரும் 20 விநாடிகள் முதல் 25 விநாடிகள் வரை தரிசனம் செய்யமுடியும். திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் 70வது ஆண்டையொட்டி, ஐயப்பன் உருவம் பொறித்த தங்க டாலர்கள் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவு ஏப்.1ம் தேதி நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.