மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசி தேரோட்டம் கோலாகலம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
11மார் 2025 11:03
மதுரை; மதுரை அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் கோவிலில் மாசிப்பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. சாலையின் இருபுறமும் ஆயிரகணக்கான பக்தர்கள் தேரை எதிர்கொண்டு அழைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மேலமாசி வீதியில் அமைந்துள்ள சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட அருள்மிகு இம்மையிலும் நன்மை தருவார் திருக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் சிறப்பு பெற்ற விழாகளில் ஒன்றான மாசிப்பெருந்திருவிழா கடந்த 3 - ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழா துவங்கியதையடுத்து சுவாமிகள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிலையில் விழாவின் சிறப்பு பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்றான திருக்கல்யாண வைபவம் நேற்று (10ம் தேதி) நடைபெற்றதன் தொடர்ச்சியாக திருத்தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதையொட்டி அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் மத்தியபுரியம்மன், சுவாமி நன்மைதருவார் மற்றும் பிரியாவிடையுடன் தேரில் எழுந்தருள நடைபெற்ற சிறப்பு பூஜைகளை தொடர்ந்து, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுக்க தேர் மாசி வீதிகளில் வலம் வந்து நிலையை அடைந்தது. தேரோட்ட விழாவில் மதுரையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலைகளின் இரு புறங்களிலிலும் நின்று சுவாமியை வரவேற்று தரிசனம் செய்தனர்.