காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசிமகத் தேர்த்திருவிழா கடந்த, 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று அதிகாலை 4.00 மணிக்கு கோவில் நடை திறந்து, மூலவருக்கு திருமஞ்சணம் பூஜை செய்யப்பட்டது. பின், திருமணக் கோலத்தில் உச்சவ மூர்த்தி அரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் எழுந்தருளினார். அர்ச்சகர்களின் வேத மந்திரங்கள் முழங்க, திருக்கல்யாண உற்சவ சடங்குகள் நடந்தன. புண்ணிய வாகம் முடிந்த பின், அரங்கநாதப் பெருமாளுக்கு பூணுால் அணிவித்து, கங்கணம் கட்டி, குலம் வாசிக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் ஸ்தலத்தார் நல்லான் சக்கரவர்த்தி பாலாஜி சுவாமிகள், வேதவியாச சுதர்சன பட்டர் சுவாமிகள் ஆகியோர் மஞ்சள் இடித்து, மாங்கல்யா பூஜைக்கு கொடுத்தனர். இன்று அதிகாலை, 5:30 மணிக்கு அரங்கநாதப் பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக தேருக்கு எழுந்தருளினார். அதைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. பக்தர்கள் புடைசூழ காரமடை நகர வீதிகளில் வலம் வந்தது.தேரின் உள் பகுதியில் நடு நாயகமாக ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக உற்சவர் அரங்கநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார். விழாவில் கோவை, காரமடை, மேட்டுப்பாளையம், உதகை, அன்னூர், திருப்பூர், அவிநாசி ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் தேரின் வடம் பிடித்து இழுத்தனர்.