பதிவு செய்த நாள்
12
மார்
2025
05:03
உத்தமபாளையம்; உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் மாசி மகத் தேரோட்டம் இன்று நடைபெற்றது. கொட்டும் மழையிலும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் ஞானாம்பிகை கோயில் கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். இங்கு திருமண பொருத்தம், கிரக அமைப்புக்களை உணர்ந்து கொள்வதற்காக கோயில் முதல் பிரகாரத்தில் கால சக்கரம் நந்திக்கு நேர் மேலாக அமைக்கப்பட்டுள்ளது அபூர்வமாகும். சிறப்பு பெற்ற இந்த கோயிலின் மாசி மகத் தேரோட்ட நிகழ்ச்சிகள் மார்ச் முதல் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இரு வேளையும் அனைத்து சமுதாயத்தினரும் மண்டகப்படி நடத்தினார்கள். மார்ச் 11 ல் திருக்கல்யாணம் நடந்தது. இன்று காலை 5:15 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ரதம் ஏறினார்கள். காலை 10:15 மணியளவில் தேரோட்டம் துவங்கியது. எம்.எல்.ஏ. ராமகிருஷ்ணன், பிடிஆர் விஜயராஜன் ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர். இந் நிகழ்ச்சியில் , மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர்கள் ஜெயபாண்டியன், முருகேசன், பேரூராட்சி தலைவர் முகமது அப்துல் காசிம் , கோம்பை ஜமீன்தார் சீனிவாசராயர், தென் காளஹஸ்தி சேவா அறக்கட்டளை முருகேசன், அயலக அணி அமைப்பாளர் ரவி, ஒம் நமோ நாராயணா பக்த சபை தலைவர் அய்யப்பன், செயலர் ரவி, அட்வகேட்ஸ் ராஜேந்திரன், சிங்காரவேலன், ஸ்ரீ தனலட்சுமி ஜீவல்லர்ஸ் பழனிவேல்ராஜன், சின்னமனூர் லட்சுமி ஜீவல்லர்ஸ் நடராசன், ஹிந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் பாண்டியன், ஒருங்கிணைப்பாளர் ராம் செல்வா, பா.ஜ. முன்னாள் இளைஞரணி மோடி கார்த்திக் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ,
ஆயிரக்கணக்கில் பக்தர்கள் ‘ஹர ஹர மகாதேவா’ கோஷத்துடன் வடம் பிடித்து இழுத்தனர். தேர் வடம் பிடித்து இழுக்கப்பட்ட 30 நிமிடங்களில் சாரல் மழை துவங்கி, பின் மழை கொட்டியது. கொட்டும் மழையிலும் பக்தர்கள் வடம் பிடித்த இழுத்தனர். தேர் கிழக்கு ரதவீதி, தெற்கு ரதவீதி, வடக்கு ரதவீதியாக கிழக்கு ரதவீதியில் நிலைக்கு வந்தது. கோட்டை மேட்டு பகுதியில் ஜமாத்தார்கள் சார்பில் வரவேற்று பேனர் வைத்தும் பள்ளிவாசல் முன்பாக குடிநீர் பாட்டில்கள் வழங்கினர். பல்வேறு அமைப்புகள் சார்பில் பிரசாதம், நீர் மோர் வழங்கினர். தேர் மதியம் 2:40 மணிக்கு சுமார் 4:30 மணி நேரத்தில் தேர் நிலைக்கு வந்தது. பாதுகாப்பு ஏற்பாடுகளை ஏ.டி.எஸ்.பி., வினோஜி, டி.எஸ்..பி. க்கள் செங்கோட்டு வேலன், பெரியசாமி, சுரேஷ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான போலீசார் ஈடுபட்டனர்.
30 நிமிடங்கள் வட்டமிட்ட கருடன் : காலை 10 மணி முதல் 11 மணிக்குள் தேரோட்டம் துவங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. தேரோட்டம் துவங்கியது 9:45 மணியிலிருந்து 10:15 மணி வரை தேரை சுற்றி தொடர்ந்து 30 நிமிடங்கள் தேருக்கு மேல் வானில் கருடன் வட்டமிட்டது. மேலும் தேரோட்டம் துவங்கியதும், கருடன் ஒரு சில நிமிடங்கள் தேருக்கு நேராக வானில் வலம் வந்தது. கருடனை பார்த்த பக்தர்கள் ஹர ஹர மகாதேவா என கோஷமிட்டு வணங்கினர்.