பதிவு செய்த நாள்
28
மார்
2025
11:03
சென்னை: நாளை 29ம் தேதி சனிப் பெயர்ச்சி என்று, பல ஜோதிடர்கள் சொல்லி வரும் வேளையில், திருநள்ளாறு சனீஸ்வர பகவான் கோவில் நிர்வாகம், வரும் 29ம் தேதி, வழக்கமான பூஜைகள் நடைபெறும். வாக்கிய பஞ்சாங்கத்தைப் பின்பற்றுவதால், சனிப் பெயர்ச்சி பூஜை இப்போதைக்கு இல்லை. அது குறித்த தேதி, பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. இது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜோதிடர்கள் டிவி யிலும், யூ டியூப்பிலும், இந்த ஆண்டு சனி, குரு, ராகு - கேது என நான்கு முக்கியமான பெயர்ச்சிகள் உள்ளன என்று கூறி, அதன் அடிப்படையில் பலன்களையும் கூறி வருகின்றனர். ஜீ டிவியில் இன்றைய ராசி பலன் சொல்பவர் மட்டும், இந்தாண்டு சனிப் பெயர்ச்சி இல்லை என்கிறார். இவர் சொல்வதை போலவே, திருநள்ளாறு கோவில் நிர்வாகமும் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பஞ்சாங்க வகைகள்; நம் நாட்டில், பழங்காலம் முதல் பின்பற்றப்பட்டு வரும், திதி, வார, மாத, யோக, நட்சத்திர நாட்குறிப்பை பஞ்சாங்கம் என்கிறோம்; வானவியல் சாஸ்திர அடிப்படையில் கோள்களின் நகர்வையும், நட்சத்திரங்களின் இருப்பையும் வைத்து பஞ்சாங்கம் கணிக்கின்றனர். நாம், இரு வகையான பஞ்சாங்கங்களைப் பயன்படுத்துகிறோம். அவை குறித்து, அறிவியல் வல்லுநர், த.வி.வெங்கடேஸ்வரன் கூறியதாவது: வாக்கிய பஞ்சாங்கம், த்ருக் கணித பஞ்சாங்கம் என்ற இரு வகையான பஞ்சாங்கங்கள் புழக்கத்தில் உள்ளன. வாக்கிய பஞ்சாங்கம் கும்பகோணத்தில் அமைந்திருந்த காஞ்சி மடம் தயாரித்தது; த்ருக் கணித பஞ்சாங்கத்தை, ரகுநாதாச்சாரி என்பவர் உருவாக்கினார். ஆண்டுதோறும் பஞ்சாங்கம் கணிக்கவென்றே, சாஸ்திர வல்லுநர்கள் அடங்கிய சபை கூடும். அவர்கள் கணித்து அளிக்கும் வாக்குப்படி, வாக்கிய பஞ்சாங்கம் தயாரிக்கப்படுகிறது. த்ருக் என்றால், கண்ணால் பார்த்து அறிந்த கொள்ளும் கணக்கு. அனைவரும் சொல்வது போல், திருக்கணித பஞ்சாங்கம் அல்ல; அதை, த்ருக் என்றே சொல்ல வேண்டும்.
கடந்த, 1868 ல், முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. அப்போது, சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்த வான் தொலைநோக்கு நிலையம், சூரிய கிரகணம், எப்போது, எந்த நேரத்தில் துவங்கும், எப்போது முடியும் என்ற ஆராய்ச்சியில் இறங்கியது. அந்த அலுவலகத்தில், எடுபிடியாக, ரகுநாதாச்சாரி என்பவர் வேலை செய்தார். அங்கு, வல்லுநர்கள் வேலை செய்வதை கூர்ந்து கவனித்து வந்த அவர், வானியலை துல்லியமாகக் கற்று, வல்லுநர்களுக்கு, பாயின்ட்கள் எடுத்துக் கொடுத்தார். அவரின் திறமையை வைத்து, அப்போதைய ஆங்கிலேயே நிர்வாகம் அவரை, நிலைய தலைவருக்கு அடுத்த படியான, பர்ஸ்ட் அசிஸ்டன்ட் அஸ்ட்ரானமர் பதவியைக் கொடுத்தது. வானியல் அறிவியலின் புலியாகத் திகழ்ந்தார் ரகுநாதாச்சாரி. நாளடைவில், பஞ்சாங்கத்தில் தென்படும் குறிப்புகளுக்கும், நடப்பு கிரக நிலைகளுக்கும் வேறுபாடு இருப்பதை உணர்ந்து, அதை ஆணித்தரமாக வலியுறுத்தத் துவங்கினார்.
உத்ராயணம் எப்போது?; உதாரணமாக, ஜனவரி 14, 15ல், உத்ராயணம் என்று சொல்லப்படும், சூரியன் வடக்கு நோக்கி தன் பயணத்தைத் தொடரும் காலம் துவங்குகிறது என்று சொல்லப்படுகிறது; ஆனால் இவர், டிசம்பர் 21, 22ம் தேதியே, உத்ராயணம் துவங்கி விடுகிறது என்று, கிரகங்களின் நகர்வை தொலைநோக்கி வாயிலாகக் கண்டறிந்தார்.
இது போன்று ஒவ்வொரு நாட்குறிப்பிலும் வித்தியாசம் தென்படவே, அவரும், இன்னும் சிலரும் சேர்ந்து, த்ருக் கணிதம் போட்டு, பஞ்சாங்கத்தை உருவாக்கினர். இந்த விவரம் காஞ்சி மடத்துக்குத் தெரிய வரவே, சதஸ் ஏற்பாடு செய்து விவாதித்தது. இறுதியில், த்ருக் முறையைப் பின்பற்றி, நாட்குறிப்பை எழுத ஒப்புக் கொண்டு, அதைப் பின்பற்றி வருகிறது.
ஸ்ரீபெரும்புதுார் அ ேஹாபில மடமும் ஸ்ரீமுகம் போட்டு, வாக்கிய பஞ்சாங்கம் சரியாக இல்லை என்று சொன்னது. ஆனால், வாக்கிய பஞ்சாங்கம், பிரம்மனே அருளியது. அதில் தவறு இருக்காது. வைதீக காரியங்களுக்கு அதைத் தான் பின்பற்ற வேண்டும் என, மின்னம்பள்ளி கிருஷ்ணா ஜோதிடர் என்பவர் கூறினார். அப்போதைய அரசவைகளிலும் இது பற்றி விளக்கினார். பிரச்னை பெரிதானதால், மீண்டும் கும்பகோணத்தில் கூட்டு சதஸ் ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால், கிருஷ்ண ஜோசியர் அதற்கு வரவில்லை; நிறைய மகாராஜாக்கள் த்ருக் பஞ்சாங்கத்தை ஏற்றுக் கொண்டனர்.
வாக்கியம் ஏன் தவறு?; பம்பரம் வேகமாகச் சுற்றும்போது, அதன் தலை இப்படியும் அப்படியுமாக மாறி மாறி சென்று வரும் அல்லவா... அது போலவே, பூமி தன்னைத் தானே சுற்றி, சூரியனையும் சுற்றி வரும்போது, அதன் தலை, இப்படியும் அப்படியுமாறு சாய்ந்தபடி தான் சுற்றும். அதை, ஆங்கிலத்தில், ப்ரெசிஷன் என்றும், தமிழில், அயன சலனம் என்றும் சொல்வோம். அப்படி சுற்றும்போது, பஞ்சாங்கத்திற்கு ஆரம்பத்தில் கணிக்கப்பட்ட துவக்கப்புள்ளி மாறித்தானே போயிருக்கும்? அப்படி துவக்கப்புள்ளி மாறி விட்டது என்பதை ஏற்றுக் கொள்ளாததால், இன்னமும் ஜனவரி 14ஐ, உத்ராயணம் என்கிறோம்; டிசம்பர் 21ம் தேதியே உத்ராயணம் துவங்குகிறது என்பதை, வாக்கிய பஞ்சாங்கம் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. இப்போதைய நிலையில், இரு சாராரிடையேயும் பிரச்னை தீர்ந்தபாடில்லை. கர்நாடகாவில் உள்ள பேளூர் மடம், சிக்கலைத் தீர்க்க முயற்சித்து, முடியாமல் போனது. கொல்கட்டா பொசிஷனல் அஸ்ட்ரானமி சென்டர் அமைப்பு, சூரிய கிரகணத்தை, அமாவாசை முடியும் நேரம் எனக் கூறுகிறது. எப்படிப் பார்த்தாலும், இரு வேறு கணக்குகள் சொல்லப்படுவதால், இன்னும் இந்த பிரச்னை தீர்க்கப்படவில்லை.
அதை விடுங்கள்...; தற்போதைய கிரக நிலவரங்களை நாம், தி பிளானட்ஸ்டுடே.காம் என்ற இணைய தளத்தில் துல்லியமாக பார்க்கும் வசதி உள்ளது. அது, வெஸ்டர்ன், ஹிந்து என இரு வகையான கிரக நிலைகளைக் காட்டுகிறது. அவை போக, ஜியோசென்ட்ரிக் என வானில் நிலவும் உண்மையான கிரக நகர்வை, உள்ளது உள்ளபடி சொல்கிறது. ஜியோசென்ட்ரிக் வகையைப் பார்த்தால், சனி கிரகம் ஏற்கனவே மீனத்தில் உள்ளதாகக் காட்டுகிறது. எனவே, வானில் நடக்கும் நிகழ்வுகளை, உள்ளது உள்ளபடி ஏற்றுக் கொண்டு, நாட்களை, நேரங்களைக் கணிக்காத வரையில், துல்லியமான கணக்குகளைக் கொடுக்க முடியாது; இது மிகவும் வருத்தமான விஷயம். இவ்வாறு, த.வி.வெங்கடேஸ்வரன் கூறுகிறார். பிளானட்ஸ்டுடே.காம் இணைய தளத்தில் ஹிந்து வகை கோள் நகர்வை பார்க்கும்போது, சனிப் பெயர்ச்சி நடப்பதை காட்டுகிறது. உலகம் முழுதும், பெரும்பாலானவர்கள் பின்பற்றும் த்ருக் பஞ்சாங்கம், வரும் 29ல் சனிப் பெயர்ச்சி நடக்கிறது என்றே சொல்கிறது என்பது, பல வல்லுநர்களின் கருத்தாக உள்ளது. எதுவாக இருந்தாலும் சரி முழு மனதுடன் இறைவனை வழிபட்ட பணியை செய்வோம்.. நல்லதே நடக்கும்.