பதிவு செய்த நாள்
01
ஏப்
2025
04:04
திருவாலங்காடு; திருத்தணி முருகன் கோவிலின் உபக்கோவிலான வடாரண்யேஸ்வரர் திருக்கோவில் திருவாலங்காடில் அமைந்துள்ளது. இது, நடராஜபெருமான் திருநடனம் புரிந்த ஐந்து சபைகளில் முதல் சபையான ரத்தின சபை. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் உத்திர விழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பங்குனி உத்திர விழா, இன்று காலை 8:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து 10 நாட்கள் காலை, மாலை உற்சவர் வடாரண்யேஸ்வரர், வண்டார்குழலி அம்மன் சிங்க வாகனம், சூரிய பிரபை, அன்ன வாகனம், பூத வாகனம், பல்லக்கு சேவை, நாக வாகனம், புலி, யானை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில், திருவாலங்காடின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். விழாவின் 7ம் நாளான, வரும் 7ம் தேதி கமலத்தேர் விழா நடைபெற உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் விழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்து செல்வர் என்பதால், பக்தர்களுக்கு தேவையான வசதிகளை திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி, அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீதரன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.