பதிவு செய்த நாள்
08
ஏப்
2025
10:04
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவர்கள் பாலாயத்திற்கான யாகசாலை பூஜை நேற்று துவங்கியது.
நேற்று முன்தினம் மாலை பூர்வாங்க பூஜை நடந்தது. யாகசாலை பூஜைக்காக கோயில் திருவாட்சி மண்டபத்தில் சுப்பிரமணிய சுவாமிக்கு 5 யாக குண்டங்களும், கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்யகிரீஸ்வரர், பவள கனிவாய் பெருமாள், கோவர்த்தனாம்பிகை அம்பாள், பரிவார தெய்வங்களுக்கு 8 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டன. நேற்று காலை கம்பத்தடி மண்டபத்தில் அனுக்ஞை விநாயகர் முன்பு யாகம் வளர்க்கப்பட்டு கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், அக்னி பூஜை, சப்த நதி பூஜை முடிந்து அனுக்ஞை விநாயகருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மாலையில் புனித நீர் நிரப்பப்பட்ட தங்க குடத்தில் மூலவர் சுப்பிரமணிய சுவாமியின் சக்தி கலை இறக்கம் செய்யப்பட்டது. மற்ற மூலவர்களுக்கு தனித்தனியாக வெள்ளி குடங்களில் சக்தி கலை இறக்கம் செய்யப்பட்டது. பரிவார தெய்வங்களின் சக்திகள் வரைபடங்களில் கலை இறக்கம் செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து யாகசாலை பூஜை துவங்கியது. இன்று காலை 2ம் கால யாக சாலை பூஜையும், மாலையில் 3ம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. ஏப். 9 காலையில் சண்முகர் சன்னதியில் அத்தி மரத்தால் உருவாக்கப்பட்ட மூலவர்களின் விக்கிரகங்கள் எழுந்தருள செய்யப்படும். அன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை பூர்த்தி செய்யப்பட்டு, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்படும் மூலவர்களின் கலை இறக்கப்பட்ட புனித நீர் கலசங்களில் சண்முகர் சன்னதிக்கு எடுத்துச் செல்லப்படும். அங்கு அத்தி மர மூலவர்களின் விக்ரகங்களில் கலையேற்றம் செய்யப்பட்டு, புனித நீர் அபிஷேகம் முடிந்து அலங்காரமாகி, தீபாராதனை நடக்கும். அன்று முதல் கும்பாபிஷேகம் முடியும் வரை அனைத்து பூஜைகளும் மூலவர்களின் அத்தி மர விக்கிரகங்களுக்கு நடைபெறும் என அறங்காவலர் குழுத் தலைவர் சத்யபிரியா, துணை கமிஷனர் சூரிய நாராயணன், அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், மணிச்செல்வம், பொம்மதேவன், ராமையா தெரிவித்தனர்.