பதிவு செய்த நாள்
08
ஏப்
2025
10:04
காஞ்சிபுரம்; காஞ்சிபுரத்தில் பிரசித்திபெற்ற காஞ்சி காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில், மூன்று நாட்கள் தெப்போத்சவம் விமரிசையாக நடைபெறும். அதன்படி, நடப்பு ஆண்டுக்கான தெப்போத்சவம் நேற்று விமரிசையாக துவங்கியது. முதல் நாள் தெப்போத்சவமான நேற்று இரவு 7:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் உள்ள பஞ்சகங்கை தீர்த்தம் எனப்படும், தெப்ப குளத்தில், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், லட்சுமி, சரஸ்வதி தேவியருடன், காமாட்சியம்மன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளினார். பல்வேறு பூஜைகளுகக்குப்பின், தெப்ப குளத்தில் மூன்று சுற்று வலம் வந்தார். இரண்டாம் நாள் தெப்போற்சவமான இன்று ஐந்து சுற்றும், நிறைவு நாளான நாளை ஏழு முறையும் காமாட்சியம்மன் தெப்பத்தில் வலம் வருகிறார். தெப்போத்சவத்திற்கான ஏற்பாட்டை காஞ்சி காமாட்சியம்மன் கோவில் ஸ்ரீகார்யம் சுந்தரேச ஐயர், மணியகாரர் சூரியநாராயணன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.