ஏர்வாடி: ஏர்வாடியில் முகரம் பண்டிகையை முன்னிட்டு சந்தனக்கூடு சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. ஏர்வாடியில் முஸ்லிகள் ஆண்டுதோறும் முகரம் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் முஸ்லிகளில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் கடந்த மாதம் 16ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய பண்டிகை எதிர்ப்புக்குழுவினர் கோர்ட்டில் தடை உத்தரவு பெற்ற காரணத்தினால் இந்த பண்டிகையை கொண்டாடமல் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் முகரம் பண்டிகை கமிட்டியினர் கோர்ட்டில் தடை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனுமதி பெற்றதையடுத்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் இப்பண்டிகை நடந்தது. ஏர்வாடி லெப்பை வளைவு தெருவில் இருந்து ஒரு சந்தனக்கூடும், 6வது தெருவில் இருந்து ஒரு சந்தனக்கூடும் ஊர்வலமாக எடுத்து சென்றனர். இரண்டு சந்தனக்கூடுகளும் 6ம் தெருவில் நம்பியாற்று அருகே சந்தித்துக் கொண்டது. இந்த சந்தனக்கூடு சந்திப்பு நிகழ்ச்சியில் ஏர்வாடி மற்றும் சுற்றுக்கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். பண்டிகை கொண்டாடுவதில் இருகோஷ்டிகளுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அங்கு நான்குநேரி டிஎஸ்பி கோவிந்தராஜ் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.