பதிவு செய்த நாள்
10
ஏப்
2025
11:04
கயிலையில் சிவபெருமானிடம் உமையவள், பஞ்சாட்சர மந்திரத்தின் பெருமைகளை விளக்குமாறு கேட்டார். அவர் சொல்லத் தொடங்கியபோது,தேவியின் பார்வை, அங்கு வந்து தோகை விரித்தாடிய மயிலின் மீது திரும்பியது. அதைக் கண்ட ஈசன்,‘பஞ்சாட்சர மந்திரத்தில் கவனம் செலுத்தாமல், எந்த மயிலின் ஆட்டத்தில் மயங்கினாயோ நீ அதுவாகவே மாறக்கடவாயாக’ என்று சினத்துடன் சாபமிட்டார். தன் தவறுக்கு வருந்திய பார்வதி,கருணை காட்டுமாறு வேண்டிக்கொள்ள, தொண்டை மண்டலம் சென்று, அங்குள்ள ஒரு புன்னை மரத்தடியில், மயில் வடிவில் தன்னை வழிபட்டால் சாபம் நீங்கும் என, சிவபெருமான் அருளினார். அதன்படி, இத்தலத்தையே கயிலையாக பார்வதி பாவித்து, புன்னை மரத்தடியில் எழுந்தருளிய சிவலிங்கத்தை மயிலுருவில் பூஜித்து ,அவரோடு இணைந்தார். அதன் காரணமாகவே இந்த தலம் திருமயிலை எனப் பெயர் பெற்றது. இத்தலத்தின் அன்னை கற்பகாம்பாள் எனப் பெயர் பெற்றிருக்கிறாள். சிவனாரின் கரத்தில் ஒட்டிகொண்டிருந்த பிரம்ம கபாலத்தோடு, உருவகப் படுத்தி, ஆதி காலத்தில் கபாலிகர்கள் சிவபெருமானை இத்தலத்தில் வழிபட்டனர். எனவே, இங்கு பரிபாலிக்கும்ஈசனுக்கு கபாலி என்று ஒரு பெயர் வந்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன.
பங்குனிப் பெருவிழாவின் பத்து நாட்கள்; மயிலையே கயிலை, கயிலையே மயிலை எனும் அளவிற்கு சிறப்பு வாய்ந்தது கபாலீஸ்வரர் கோவில். பார்வதி மயில் வடிவம் கொண்டு இறைவனை வழிபட்டது; சம்பந்தரால் பூம்பாவையை உயிர்ப்பித்தது; வாயிலார் நாயனார் வழிபட்டு, முக்தி பெற்றது இந்த மயிலையில்தான்.
கிராம தேவதை வழிபாடு; கபாலீஸ்வரருக்கு ஆண்டுதோறும் நடக்கும் பங்குனிப் பெருவிழா தனிச்சிறப்பு வாய்ந்தது. விழாவின் முதல் நாள் கிராம தேவதை பூஜை, கோலவிழி அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடக்கும். அன்று இரவு வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகர் அருள் பாலிப்பார்.
புன்னை மர வாகனம்; ஆதி காலத்தில் இந்த நிலப்பரப்பு புன்னைக்காடாகஇருந்ததாகவும், அதில், ஒரு புன்னை மரத்தின் அடியில் சிவபெருமான் எழுந்தருளியதாகவும்புராணங்கள் கூறுகின்றன.எனவே, புன்னை மரவாகனத்தில் சுவாமி புறப்பாடுநடைபெறும்.
அதிகார நந்தி சேவை; இரண்டாம் நாள் திரு விழாவில் காலை சூரிய பிரபையிலும், மாலை சந்திர பிரபையிலும் சிவபெருமான் எழுந்தருள்வார். மூன்றாம் நாள் காலை நடைபெறும் அதிகார நந்திக் காட்சி சிறப்பு வாய்ந்தது. மாட்டின் முகமும் சிவனின் உருவமும் கொண்ட அதிகார நந்தி, ஞானத்தின் தலைவனாகக் கருதப்படுகிறது.
திரு முலைப்பால் விழா; அம்பிகை, திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால்கொடுத்த நிகழ்வை நினைவுகூரும் வகையில் திரு முலைப்பால் விழா நடத் தப்படுகிறது. மண்டபத்தில் ஞானசம்பந்தரின் திருமேனிக்குப் பால் ஊட்டும் வைபவம் நடைபெறும்போது, பக்தர்கள் குழந்தைகளுக்குப் பாலூட்டுவர். அப்படிச் செய்வதால் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பதுநம்பிக்கை.
வாகனங்களின் சேவை; விழாவின் நான்காம் நாள் நாக வாகனத்திலும், ஐந் தாம் நாள் வெள்ளி ரிஷப வாகனத்தில் பெருமானும், தங்க ரிஷப வாகனத்தில் அம்பிகையும், மயில் வாகனத்தில் முருகனும், சண்டிகேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்திலும், விநாயகர் வெள்ளி மூஷிக வாகனத்திலும் எழுந்தருளுவர்.ஆறாம் நாள் யானை வாகனத்தில் இறைவன் எழுந்தருள்வார்.
தேரோட்டம்; பங்குனிப் பெருவிழாவின் ஏழாம் நாள் திருவிழா அன்று, வில், அம்பு அலங்காரத்துடன் கபாலீஸ்வரர் தேரில் எழுந்தருள்வார். திரிபுர சம்ஹாரம் நடைபெறும் பொருட்டே இந்த வில், அம்பு அலங்காரம்.
பூம்பாவை உயிர்பித்தல்; பங்குனி பெருவிழாவின் எட்டாம் நாள் காலை பூம்பாவை உயிர்ப்பித்தல் திருவிழா மிக முக்கியமானது. மயிலையின் தல வரலாற்றைச் சொல்லும் இந்நிகழ்ச்சி நடைபெறும். தேவனேசனின் மகள் பூம்பாவையின்அஸ்தியில் இருந்து திருஞான சம்பந்தர் உயிர்ப்பிக்கும் காட்சி நடக்கும்.
அறுபத்து மூவர் பெருவிழா; பெருவிழாவின் எட்டாம் நாள் மாலை அறுபத்து மூவர் புறப்பாடு நடக்கும். மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணிவரை நீளும்இந்தத் திருவிழாவைக் காண லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர். கோலவிழி அம்மன், விநாயகர் அறுபத்து மூவர் புறப்பாடு நடைபெறும். இதைத் தொடர்ந்து, கபாலீஸ்வரர் வெள்ளி தேரில் எழுந்தருளி, அறுபத்து மூவருக்கும்காட்சி அளிப்பார். அறுபத்து மூவர் உற்சவத்தை முன்னிட்டு, ராயப்பேட்டையில் தொடங்கி மந்தைவெளி வரை அன்னதானம் நடைபெறும்.
சிவ–விஷ்ணு: விழாவின் ஒன்பதாம் நாள் சிவபெருமான் பிட்சாடனார் வடிவிலும், மகாவிஷ்ணு மோகினி வடிவிலும் காட்சியளிப்பர். அப்போது மோகினி வடிவில் இருக்கும் மகாவிஷ்ணு நடனமாடியபடி அருள்பாலிப்பார்.
திருக்கல்யாணம்; விழாவின் பத்தாம் நாள் காலை, கபாலீஸ்வரர் தீர்த்தவாரி நடைபெறும். பின், மயில் உருவில் இருக்கும் பார்வதி, புன்னை மரத்தின் அடியில் இருக்கும் பெருமானை வழிபடும் நிகழ்வு நடக்கும். பவுர்ணமி தினம் இரவு மயில் உருவம் நீங்கி சிவபெருமானைக் கரம் பிடிப்பார் அன்னை பார்வதி.