பதிவு செய்த நாள்
11
டிச
2012
11:12
திருநெல்வேலி: நெல்லை டவுன் திருஞான சம்பந்தர் கோயிலில் 20 லட்ச ரூபாய் செலவில் உபயதாரர்கள் உதவியுடன் நடந்துவரும் திருப்பணி வேலைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. நெல்லை டவுனில் குற்றாலம் ரோட்டில் 800 ஆண்டுகள் பழமைவாய்ந்த திருஞான சம்பந்தர் கோயில் அமைந்துள்ளது. திருஞான சம்பந்தருக்காக அமைக்கப்பட்ட தனிக்கோயில். 12ம் நூற்றாண்டில் இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மன்னரால் கட்டப்பட்டது. திருஞான சம்பந்தர் இங்கு தங்கி பதிகம் பாடியதன் நினைவாக இக்கோயில் கட்டப்பட்டுள்ளதாக கல்வெட்டு செய்திகளில் கூறப்பட்டுள்ளன. இக்கோயிலில் மூலவர் திருஞான சம்பந்தராக அருள்பாலிக்கிறார். இதுதவிர நெல்லையப்பர், காந்திமதிஅம்பாளுக்கு தனித்தனி சன்னதிகள் அமைந்துள்ளன. இவர்களுடன் சரஸ்வதி அம்பாள், நடராஜர், சிவகாமிஅம்பாள், மாணிக்கவாசகர், காரைக்கால் அம்மையார், விநாயகர், குபேரன், பிரம்மா, ஸ்ரீதேவி, பூதேவி சமேத பெருமாள், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை, லெட்சுமி, சூரியன், சந்திரன், சண்டிகேஸ்வரர், சனீஸ்வரன், கால பைரவர் ஆகிய சுவாமிகள் அருள்பாலிக்கின்றனர். இக்கோயிலில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு நூறு ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இதையடுத்து மிகவும் சேதமடைந்திருந்த இக்கோயிலில் பக்தர்கள், உபயதாரர்கள் உதவியுடன் அறநிலையத்துறை அனுமதியுடன் சுமார் 20 லட்ச ரூபாய் செலவில் பல்வேறு திருப்பணிகள் நடந்துவருகின்றன. திருஞான சம்பந்தர் விமானம், நெல்லையப்பர், காந்திமதிஅம்மன் சன்னதி விமானம் கட்டுமான பணிகள், சுதை, சிற்ப வேலைகள், பிரகார சுவர், தரைத்தளம், தள ஓடு பதித்தல், மின் வயரிங் பணிகள், கற்களை புதுப்பித்தல் போன்ற பணிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. இந்த பணிகளை தஞ்சாவூர் பூம்புகார் சேகர் ஸ்தபதி குழுவினர் செய்து வருகின்றனர். கோயில் செயல் அலுவலர் கூடுதல் பொறுப்பு தங்கபாண்டியனும் பணிகளை அவ்வப்போது மேற்பார்வையிட்டு விரைவு படுத்தி வருகிறார். விரைவில் பணிகளை முடுக்கிவிட்டு கும்பாபிஷேகம் நடத்த திருஞான சம்பந்தர் பக்தர்கள் முடிவு செய்துள்ளனர். இன்னும் ஒரு சில பணிகளுக்கு உபயதாரர்களின் உதவி தேவைப்படுவதாகவும், விரைவில் பணிகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் திருஞான சம்பந்தர் பக்தர்கள் தெரிவித்தனர்.