பதிவு செய்த நாள்
11
டிச
2012
11:12
தென்காசி: தென்காசிக்கு 15ம் தேதி வருகை தரும் அச்சன்கோவில் ஐயப்பன் திருஆபரணப் பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. கேரள மாநிலம் அச்சன்கோவிலில் ஐயப்பன் அரசர் கோலத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இதனால் அரசன் ஐயப்பன் என அழைக்கப்படுகிறார். சபரிமலைக்கு விரதம் இருந்து இருமுடி கட்டி செல்லும் ஐயப்ப பக்தர்களில் பெரும்பாலானோர் அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்துவது வழக்கம். அச்சன்கோவில் ஐயப்பனுக்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க, வைர, வைடூரிய ஆபரணங்கள் உள்ளன. இவற்றில் முக்கியமாக ஐயப்பனின் தலை, முகம், மார்பு, கைகள், கால்கள் கவசம் மற்றும் 18 இஞ்ச் நீளம் உடைய தங்க வாள் உள்ளது. இந்த தங்க வாள் காந்தமலையில் பாவூர்சத்திரத்தை சேர்ந்த ஐயப்ப பக்தர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டு கோயிலுக்கு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாளில் காந்தமலை என எழுதப்பட்டுள்ளது. இதன் எடை இடத்திற்கு இடம், நேரத்திற்கு நேரம் மாறுபடும். இதனால் இதனை ஐயப்ப பக்தர்கள் மாய வாள் என்றே அழைப்பர். திருஆபரணங்கள் அடங்கிய பெட்டி புனலூர் அரசு கருவூலத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
ஐயப்பன் கோயிலில் நடக்கும் மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இதற்காக ஆண்டு தோறும் புனலூர் அரசு கருவூலத்திலிருந்து அச்சன்கோவிலுக்கு திருஆபரணப் பெட்டி பாதுகாப்பாக எடுத்து செல்லப்படும். அப்போது திருஆபரணப்பெட்டி தென்காசிக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டு அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் மண்டல மகோற்சவ விழா வரும் 16ம் தேதி துவங்குகிறது. இதனை முன்னிட்டு திருஆபரணப் பெட்டி 15ம் தேதி புனலூர் அரசு கருவூலத்திலிருந்து எடுத்து வரப்படுகிறது. புளியரை, செங்கோட்டை வழியாக தென்காசிக்கு பகல் 1 மணிக்கு திருஆபரணப் பெட்டி கொண்டு வரப்படுகிறது. காசிவிசுவநாதர் கோயில் முன் திருஆபரணப் பெட்டிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனை வழிபாடு நடக்கிறது. திருஆபரணப் பெட்டி வரவேற்பு கமிட்டி சார்பில் அளிக்கப்படும் வரவேற்பு நிகழ்ச்சியில் திரளான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்கின்றனர். ஏற்பாடுகளை வரவேற்பு கமிட்டி தலைவர் ஏ.சி.எஸ்.குருசாமி நாடார், செயலாளர் மாடசாமி ஜோதிடர், பொருளாளர் தங்கவேல் ஆசாரி, அமைப்பு துணை செயலாளர் மணி, சுப்புராஜ், அரிகரன், ஐயப்ப சேவா சங்க தலைவர் மாரிமுத்து, முன்னாள் கவுன்சிலர் ராமன், தமிழ், முருகன், திருநாவுக்கரசு, அழகிரி செய்து வருகின்றனர். வரவேற்பு நிகழ்ச்சி முடிந்ததும் திருஆபரணப் பெட்டி பண்பொழி, மேக்கரை வழியாக அச்சன்கோவிலுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 16ம் தேதி அச்சன்கோவில் ஐயப்பன் கோயிலில் துவங்கும் மகோற்சவ விழாவில் ஐயப்பனுக்கு திருஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுகிறது.