புதுச்சேரி: ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக் குழு சார்பில், ஆறாவது ரத யாத்திரை மற்றும் பஜனை நடந்தது. ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழா, வரும் 2017ம் ஆண்டு சித்திரை மாதம் திருவாதிரையில் வருகிறது. இதையொட்டி, புதுச்சேரியில் ராமானுஜர் ஆயிரமாவது ஆண்டு விழாக்குழு அமைத்து சொற்பொழிவு, மார்கழி மகோற்சவம், ரத யாத்திரை நடத்தப்படுகின்றன. இதில், 6வது ரத யாத்திரை நிகழ்ச்சி நேற்று முன் தினம் நடந்தது. லாஸ்பேட்டை திரவுபதியம்மன், பார்த்தசாரதி பெருமாள் கோவில் இருந்து புறப்பட்டது. ரதயாத்திரையில் வைத்திக்குப்பம் வேங்கடா ஜலபதி பஜனைக்கூடம், பாண்டுரங்க பஜன்சமாஜ், நம்மாழ்வார் பஜனை சபை உள்ளிட்ட பல்வேறு பஜனை சபையினர் கலந்து கொண்டனர். பிற்பகல் லாஸ்பேட்டை திரவுபதியம்மன் கோவிலில் ஹரே ராமா ஹரே கிருஷ்ணா சபையினரின் பஜனை நடந்தது. தொடர்ந்து, விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம், ஆரத்தி பிரபந்த பாராயணம் நடந்தது. மாலை 5 மணிக்கு அண்ணமாச்சாரியார் வாசவி மகிளா சபையினர் கீர்த்தனை இசைத்தனர். இரவு 8 மணிக்கு மங்கள ஆரத்தியுடன் விழா நிறைவு பெற்றது.