பதிவு செய்த நாள்
12
டிச
2012
10:12
குளித்தலை: அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோவிலுக்கு, பக்தர்கள் செல்ல, கிடப்பில் போடப்பட்ட ரோப்கார் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. கரூர் மாவட்டம், அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் மலை கோவில் 1,117 படிகள் கொண்டது. பிரசித்தி பெற்ற கோவிலில் சித்திரை மாதம் தேரோட்டமும், மாதந்தோறும் பவுர்ணமி கிரிவலமும், கார்த்திகை மாதம் திங்கள்தோறும் சோமவாரம் நிகழ்ச்சியும் நடந்து வருகிறது. குறிப்பிட்ட சில விசேஷ நாட்களில் சிறப்பு தரிசனம் நடந்து வருகிறது. அய்யர்மலை மலைக் கோவிலுக்கு தமிழகம் மட்டுமல்லாமல், ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் வசதிக்காக, கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, கோவிலுக்கு ரோப்கார் வசதியை ஏற்படுத்த அனுமதி வழங்கப்பட்டது. மேலும், பக்தர்கள் பங்களிப்பு தொகையாக, இரண்டு கோடியே, 40 லட்சம் ரூபாய் குளித்தலை கே.வி.பி., வங்கியில் வங்கியில் டெபாஸிட் செய்யப்பட்டது. பிறகு, கடந்த, 2011 ஃபிப்ரவரி, 2ம் தேதி, அய்யர் மலைக்கு ரோப்கார் அமைக்க அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பிறகு, 2011ம் ஆண்டு மே மாதம் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அ.தி.மு.க., பொறுப்பேற்றது. இதையடுத்து, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அய்யர்மலைக்கு ரோப்கார் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே, "கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, குளித்தலை எம்.எல்.ஏ., பாப்பாசுந்தரம் ஆகியோர், அய்யர் மலையில் ரோப்கார் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.