திருவாலங்காடு: திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில், தெப்பத் திருவிழா கோலாகலமாக நடந்தது.திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவில், சிவபெருமான் நடனமாடிய திருச்சபைகளில் முதல் சபையாகும். ரத்தின சபை என்றழைக்கப்படும் இத்திருத்தலம், காரைக்கால் அம்மையார் தலையால் நடந்து வந்து, சிவபெருமானின் நடனத்தை கண்டு ரசித்த தலமாகும்.இவ்வாண்டு தெப்பத் திருவிழா, நேற்று முன்தினம் நடந்தது. தெப்பத்தில் உற்சவர் வண்டார்குழலி அம்மன் சமேத வடாரண்யேஸ்வரர், காளி அம்மன் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, மூன்று முறை உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இத்திருவிழாவில், பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு உற்சவ பெருமானை தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, திருத்தணி முருகன் கோவில் அறங்காவலர் ஜெயசங்கர் தலைமையில், விழா குழுவினர் செய்து இருந்தனர்.