பதிவு செய்த நாள்
15
ஏப்
2025
10:04
சென்னை ; குரோதி ஆண்டில் இருந்து விசுவாவசு தமிழ் புத்தாண்டு நேற்று பிறந்தது. இதை முன்னிட்டு, சென்னை, புறநகரில் உள்ள கோவில்களில் சிறப்பு தரிசனத்திற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. பல கோவில்களில் பஞ்சாங்கம் வாசித்து பலன்கள் கூறப்பட்டன. அந்தவகையில், வடபழனி முருகன் கோவிலில், நேற்று அதிகாலை 4:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின், பள்ளியறை பூஜை நடந்தது. காலை 5:00 மணி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். பெசன்ட்நகர் அஷ்ட லட்சுமி கோவிலில், நேற்று காலை 6:30 மணி முதல் மதியம் 1:00 மணிவரையிலும், மாலை 4:00 மணி முதல் இரவு 9:00 மணிவரையிலும் பக்தர்கள் அலங்கார மண்டபத்தில் உத்சவர் தரிசனத்திற்கு நடை திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து விசுவாவசு வருட பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதேபோல, தி.நகர், வெங்டேஸ்வர பெருமாள், மயிலை கபாலீஸ்வரர், திருவான்மியூர் மருந்தீஸ்வரர், மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்த சாரதி பெருமாள், பாரிமுனை கற்பகாம்பாள், திருநீர்மலை ரங்கநாதர், குன்றத்துார் முருகன், மாங்காடு காமாட்சி அம்மன் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. – நமது நிருபர் –